லக்னோ: “நம் நாட்டில் போராட்டங்களை நடத்தி, குழப்பத்தை ஏற்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சதித் திட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மேற்கொண்டுள்ளன,” என, பா.ஜ.,வைச் சேர்ந்த ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் அதன் தலைமையிலான, 'இண்டி' கூட்டணியில் இடம்பெற்றுள்ள எதிர்க்கட்சிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லியில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. அறைகூவல்
இது தொடர்பாக, கரப்பான்பூச்சி கட்சியினரும் தடையை மீறி போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது குறித்து உத்தர பிரதேசத்தின் லக்னோவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கு எதிராக இளைஞர்களை முன்னிறுத்தி நடத்தப்படும் போராட்டங்களை பயன்படுத்தி, நாட்டில் கொந்தளிப்பை உருவாக்கி ஸ்திரத்தன்மையை குலைக்க எதிர்க்கட்சிகள் முயன்று வருகின்றன. காங்கிரசும், அதன் சார்பு அமைப்புகளும், இளைஞர்களின் ஆற்றலை தேசத்தை கட்டி எழுப்ப பயன்படுத்துவதற்கு பதிலாக, அரசியல் மோதல்களுக்கும், குழப்பங்களுக்கும் திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. நாட்டின் இளைஞர்களை, குழப்ப அரசியலின் பகடைக்காய்களாக பயன்படுத்த முயற்சிகள் நடக்கின்றன. சிலர், வங்கதேச நிகழ்வுகளை முன்மாதிரியாக கொண்டு ஆட்சி மாற்றம் ஏற்படுத்த விரும்புகின்றனர். வங்கதேச கலகத்தால் ஈர்க்கப்பட்டதை சிலர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டனர். இன்னும் சிலர், மத்திய அரசை கவிழ்க்க வேண்டும் என்று துணிச்சலாக அறைகூவல் விடுக்கின்றனர். ஜனநாயக அமைப்புகளை சிதைத்து, நாட்டை வன்முறை குழப்பத்தில் ஆழ்த்துவதே இவர்களின் ஒரே நோக்கம். இவர்களின் போராட்டம், தேர்தல் சீர்திருத்தங்களுக்காகவோ, எஸ்.ஐ.ஆர்., பணிக்கு எதிரானதோ, தலைமை கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்காகவோ அல்ல. நாட்டின் இளைஞர்களின் ஒளிமயமான எதிர்காலத்திற்காகவும் இது நடக்கவில்லை.சந்தர்ப்பவாதம்
மாறாக, நாட்டில் குழப்பத்தை விளைவித்து அதிகாரத்தை கைப்பற்ற திட்டமிடும் சதி இது. காங்கிரசும், அதை சார்ந்த எதிர்க்கட்சிகளும் மேற்கொண்டுள்ள சதித் திட்டம் இது. தேர்தல் சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் கமிஷன் மீதான விமர்சனங்களை ஒரு சாக்காக பயன்படுத்தி, நாட்டில் அமைதியின்மையை உருவாக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன. அரசியல் ஆதாயங்களுக்காக அரசியலமைப்புகளை சிதைப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. போலியான போராட்டம், அரசியலமைப்பை களங்கப்படுத்தும் முயற்சிகள், அரசியல் சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் வாயிலாக, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை தடுத்துவிட முடியாது. குழப்பத்தை விளைவிக்கும் அரசியலில் ஈடுபடுவதற்கு பதிலாக, மக்கள் வழங்கிய தீர்ப்பை ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஏற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
சீர்குலைக்கும் முயற்சி : நிதின் நபின்
போராட்டங்கள் குறித்து பா.ஜ., தேசிய தலைவரும், அக்கட்சியின் ராஜ்ய சபா எம்.பி.,யுமான நிதின் நபின் கூறியதாவது: மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் வாயிலாக, வெளிநாட்டு சக்திகளின் துணையுடன் நாட்டின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டுள்ளன. ஆட்சி மாற்றம் என்ற கோரிக்கையின் வாயிலாக, அவர்களின் உண்மையான நோக்கம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த போராட்டங்கள் தேர்தல் சீர்திருத்தங்களுக்கானது அல்ல; பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியை அகற்றுவதற்கானது. ஜனநாயக அமைப்பை பலவீனப்படுத்தும் எந்த முயற்சியையும், பா.ஜ.,வினரோ உண்மையான தேசப்பற்றுள்ள மக்களோ அனுமதிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.