நம்ருப்: ''சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினரை நம் நாட்டிற்குள் குடியேற்ற காங்கிரஸ் உதவி செய்கிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக இப்படியொரு தேசவிரோத நடவடிக்கையில் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மாக குற்றஞ்சாட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள நம்ருப் பகுதியில், 10,601 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உரத் தொழிற்சாலை கட்டி முடிக்கப்பட்டது. இந்த ஆலையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: அசாமின் காடுகள் மற்றும் நிலப்பகுதிகளில் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேச மக்களை குடியேற்ற காங்கிரஸ் பெரிதும் விரும்புகிறது. ஒட்டு வங்கியை பலப்படுத்த வேண்டும் என்பதே, அக்கட்சியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. சொந்த நாட்டு மக்கள் மீது, அக்கட் சிக்கு எந்த அக்கறையும் இல்லை. சட்டவிரோத வங்கதேச குடியேறிகளுக்கு உதவி செய்வதன் மூலம், காங்கிரஸ் தேச விரோத நடவடிக்கையில் ஈடுபடுகிறது. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை காங்கிரஸ் எதிர்ப்பதற்கு அதிகாரம், பதவி மீதான மோகமே காரணம். பா.ஜ., மேற்கொள்ளும் அனைத்து நல்ல விஷயங்களையும் அக்கட்சி எதிர்க்கும். அசாம் மாநில மக்களின் அடையாளம், நிலம், கவுரவம் அனைத்தையும் பாதுகாக்க பா.ஜ., அரசு என்றென்றும் உழைக்கும். இந்த மண்ணின் மைந்தரான இசையமைப்பாளர் பூபென் ஹஸாரிகாவுக்கு பா.ஜ., அரசு, 'பாரத ரத்னா' விருது வழங்கியதற்கும் காங்கிரஸ் வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்தது. பாடகர்கள், நடனக் கலைஞர்களுக்கு எல்லாம் மோடி அரசு பாரத ரத்னா விருது வழங்குகிறது என ஏளனமாக பேசியது. விவசாயிகள் பிரச்னைகளை தீர்க்கவோ, உரத் தொழிற்சாலையை நவீனப்படுத்தவோ காங்கிரஸ் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுத்தது இல்லை. ஆனால், பா.ஜ., அரசு விவசாயிகளின் தேவையை அர்ப்பணிப்பு உணர்வுடன் நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
மாணவர்களுடன் உரையாடிய மோடி
அசாமில் நதி சுற்றுலாவை ஊக்கப் படுத்தும் வகையில், பிரம்மபுத்ரா நதியில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கப்பலில் பயணித்தார். பள்ளி தேர்வுக்கான விவாதம் என்ற திட்டத்தின் கீழ் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மூன்று அடுக்கு கொண்ட கப்பலில், 25 மாணவர்களுடன் பிரம்மபுத்ரா நதியில் பயணித்துக் கொண்டே பிரதமர் மோடி உரையாற்றினார். பிரதமரின் பயணம் காரணமாக, கரையோரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி குறித்து கூறிய அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, ''கடந்த ஆண்டு பிரதமர் மோடி கசிரங்கா சரணாலயத்துக்கு வந்து சென்றபின், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. ''தற்போது அவர் பிரம்மபுத்ராவில் கப்பல் மூலம் பயணித்ததால், இனி நதி சுற்றுலாவும் மேம்படும்,'' என நம்பிக்கை தெரிவித்தார். பள்ளி மாணவர்களிடையே நிலவும் தேர்வு பயத்தை போக்க, 'பரிக்ஷா பே சர்ச்சா' என்ற பெயரில், பிரதமர் மோடி, 2018 முதல் விவாதம் நடத்தி வருகிறார்.