துணை முதல்வர் சிவகுமார் மீது காங்., - எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி
பெலகாவி; ஹிட்கல் அணையில் இருந்து, தார்வாட் தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் திட்டத்திற்கு, துணை முதல்வர் சிவகுமார் ஒப்புதல் அளித்து இருப்பதால் அவர் மீது, பெலகாவி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். பணிகளை நிறுத்தி வைக்க, கலெக்டர் முகமது ரோஷனுக்கு, பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உத்தரவிட்டு உள்ளார்.பெலகாவி, ஹுக்கேரி தாலுகாவில் உள்ளது ஹிட்கல் கிராமம். இங்கு ஹிட்கல் அணை உள்ளது. இந்த அணையில் இருந்து தார்வாடில் உள்ள தொழிற்சாலைகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் வழங்க துணை முதல்வரும், நீர்பாசன அமைச்சருமான சிவகுமார் முடிவு செய்து இருந்தார்.ஆனால், இது தொடர்பாக பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உட்பட காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் விவாதிக்கவில்லை. இந்நிலையில் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் பணிகளுக்கு ஒப்புதல் அளித்து இருப்பதுடன், பணிகளை உடனடியாக துவங்கவும், பெலகாவி கலெக்டர் முகமது ரோஷனுக்கு, சிவகுமார் உத்தரவிட்டார். இதனால் அவர் மீது, பெலகாவி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதனால், பணிகளை நிறுத்தி வைக்க கலெக்டருக்கு, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி உத்தரவிட்டு உள்ளார். அணை, பெலகாவியில் உள்ளது. தண்ணீர் மட்டும் தார்வாடுக்கா என்று எம்.எல்.ஏ.,க்கள் பகிரங்கமாக கேள்வி எழுப்பி உள்ளனர். இதற்கிடையில், இந்த விவகாரத்தில் பொறுமை காக்கும்படி, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு சதீஷ் ஜார்கிஹோளி அறிவுரை கூறி உள்ளார். 'தண்ணீர் கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிப்போம். நமது எதிர்ப்பை மீறி ஏதாவது நடந்தால், நாம் யார் என்று காட்டுவோம்' என்றும் கூறி இருக்கிறார். ஏற்கனவே சதீஷ் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சிலர் வெளிநாடு சுற்றுலா செல்ல திட்டமிட்டு உள்ளனர். தண்ணீர் கொண்டு செல்லும் விஷயத்தில், சிவகுமார் கை ஓங்குவது போல தெரிந்தால், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களை வெளிநாட்டிற்கு சுற்றுலா அனுப்பி வைத்து, அரசுக்கு ஆட்டம் காட்டவும் சதீஷ் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.