காசியாபாத்: காங்கிரஸ் எம்.பி., ராகுலிடம் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 'தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன்' என ராகுல் பதிலளித்தார்.உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது ராகுல் கூறியதாவது: இது சித்தாந்தங்களுக்கு இடையிலான தேர்தல். ஆர்எஸ்எஸ் மற்றும் பா.ஜ.,வும் இந்திய அரசியலமைப்பையும், ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சித்து வருகிறது. மறுபுறம் இண்டியா கூட்டணியும், காங்கிரசும் அரசியலமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாக்க போராடுகிறது. இந்த தேர்தலில் 2, 3 பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. அதில் வேலைவாய்ப்பின்மை மிகப்பெரியது, அடுத்ததாக பணவீக்கம் உள்ளது. தேர்தல் பத்திரங்கள்
ஆனால் பா.ஜ., மக்களை திசைத்திருப்புகிறது. பிரதமரோ, பா.ஜ.,வினரோ பிரச்னைகளை பற்றி பேசுவதில்லை. தேர்தல் பத்திரங்கள் திட்டம் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகவும், தூய்மையான அரசியலுக்காக கொண்டுவரப்பட்டதாகவும் பிரதமர் கூறுகிறார். அப்படியெனில், உச்சநீதிமன்றம் தேர்தல் பத்திர திட்டத்தை ஏன் ரத்து செய்ய வேண்டும்? மேலும் அது வெளிப்படையாக இருக்கிறது என்றால், எதற்காக நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை மறைக்க வேண்டும்? எதற்காக அவர்கள் அளித்த பணம் பற்றிய விவரங்களையும் மறைக்க வேண்டும்? இது உலகின் மிகப்பெரிய கொள்ளையடிக்கும் திட்டம். ஊழல் தலைவன்
அனைத்து தொழிலதிபர்களும் தற்போது புரிந்துக்கொண்டுள்ளனர். பிரதமர் ஊழலின் தலைவன் என்பதை ஒட்டுமொத்த தேசத்திற்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்புவரை பா.ஜ., 180 இடங்களை வெல்லும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்போது 150 இடங்களை கைப்பற்றும் என நினைக்கிறேன். ஒவ்வொரு மாநிலத்தில் இருந்தும் பெறக்கூடிய தகவல்கள்படி நாங்கள் வளர்ந்து வருகிறோம்.உத்தரபிரதேசத்தில் நாங்கள் மிகவும் வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம்; சிறப்பாக செயல்படுவோம். கடந்த 10 ஆண்டுகளில், பணமதிப்பு நீக்கம், தவறான ஜிஎஸ்டி மற்றும் அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களை ஆதரிப்பதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கும் முறையை பிரதமர் மோடி குறைத்துள்ளார். எங்களின் முதல் பணி வேலைவாய்ப்பை மீண்டும் வலுப்படுத்துவது, அதற்காக நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்
அமேதி (அ) ரேபரேலி போட்டியா?
ராகுலிடம் அமேதி அல்லது ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''இது பா.ஜ.,வினரின் கேள்வி, நல்லது. கட்சி தலைமை என்ன உத்தரவிடுகிறதோ அதன்படி நடப்பேன். எங்கள் கட்சியில், வேட்பாளர்கள் தேர்வு எல்லாம் தலைமை தான் முடிவு செய்யும்'' என ராகுல் பதிலளித்தார்.வறுமை ஒழியும்
அகிலேஷ் யாதவ் கூறியதாவது: காசியாபாத்தில் இருந்து காசிபூர் வரை பா.ஜ.,வை இண்டியா கூட்டணி தோற்கடிக்கும். பா.ஜ., அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யாகிவிட்டதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ., ஊழல்வாதிகளின் கிடங்காக மாறிவிட்டது. அவர்கள் ஊழல்வாதிகளை தங்கள் கட்சியில் சேர்ப்பது மட்டுமல்ல, அவர்கள் சம்பாதித்த ஊழல் பணத்தையும் பெறுகின்றனர். இண்டியா கூட்டணிதான் இந்த தேர்தலில் புதிய நம்பிக்கை. வறுமையை ஒழிக்கக்கூடிய பல விஷயங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் உள்ளன. அதோடு இண்டியா கூட்டணிகள் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தருவதாக வாக்குறுதி அளித்துள்ளன. மத்திய அரசு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நாளில், வறுமை ஒழியும். இவ்வாறு அவர் கூறினார்.