மதமாற்ற புகார்: 3 பெண்கள் கைது
சாத்னா : மத்திய பிரதேசத்தில் நோய் வாய்பட்ட நபர் உள்ள குடும்பத்திற்குச் சென்று, கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் நோய்கள் குணமாகும் எனக்கூறி மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மத்திய பிரதேச மத சுதந்திர சட்டம் என்ற பெயரில் மதமாற்ற தடைச்சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில், சாத்னா மாவட்டத்தில் ஆதர்ஷ் திரிபாதி என்ற நபர், மூன்று பெண்கள் தங்கள் வீட்டிற்கு வந்து மோசடியாக பேசி மதம் மாற்ற முயற்சித்ததாக போலீசில் புகார் அளித்தார்.அதில், 'வீட்டிற்கு வந்த மூன்று பெண்கள் எங்களின் குடும்ப விபரங்களை கேட்டு தெரிந்து, உடல்நலம் சரியில்லாமல் உள்ள என் தந்தையை குணமாக்குவதாகவும், அதற்கு கிறிஸ்துவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், ஹிந்து மதம் குறித்தும் வெறுப்பு கருத்துக்களை தெரிவித்தனர்' என்று கூறியிருந்தார்.அவரது புகாரின் அடிப்படையில் சோனு சாகேத், பார்வதி சாகேத், அர்ச்சனா சாகேத் ஆகிய மூன்று பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். மக்களை ஏமாற்றி மதமாற்றம் செய்யும் கருத்துக்கள் உடைய துண்டு பிரசுரங்களும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.