உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி கூட்டு பாலியல் வன்முறை வழக்கில் தண்டனை உறுதி

சிறுமி கூட்டு பாலியல் வன்முறை வழக்கில் தண்டனை உறுதி

இந்தியா கேட்: சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை டில்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2018 நவம்பர் 12ம் தேதி இரவு, 14 வயது சிறுமியை இருவர் கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குப் பதிவானது. போலீசார் விசாரணை நடத்தி, பிரவீன் என்ற குற்றவாளியை நவம்பர் 29ல் கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான கலு இறந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து குற்றவாளி பிரவீனுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம், பிரவீனை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து டில்லி உயர் நீதிமன்றத்தில் பிரவீன் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் பிரதிபா எம் சிங் மற்றும் ரஜ்னீஷ் குமார் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. சக குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டி தன் மீதான தண்டனையை குறைக்கும்படி மனுதாரர் சார்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதை நிராகரித்த உயர் நீதிமன்ற அமர்வு, 'சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை மருத்துவ ஆதாரங்கள் தெளிவாக நிரூபிக்கின்றன. சக குற்றவாளி கைது செய்யப்படவில்லை என்பதற்காக தண்டனையில் இருந்து குற்றவாளி தப்பிக்க முடியாது. தவிர குற்றவாளியை பாதிக்கப்பட்ட சிறுமி தெளிவாக அடையாளம் காட்டியிருக்கிறார். அவரது வாக்குமூலம் தெளிவாக இருக்கிறது. எனவே விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உறுதி செய்யப்படுகிறது' என கூறி, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை