கோல்கட்டா: மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக சாடியுள்ளார்.மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது: பயம், ஊழல் ஆகியவை மேற்குவங்க மாநிலத்தில் உச்சத்தில் இருக்கிறது. நல்லாட்சியை கொண்டு வருவதற்கு மேற்குவங்க மக்கள் உறுதியேற்றுள்ளனர். ஊடுருவல் குறித்து மக்கள் கவலை அடைந்துள்ளனர். நாங்கள் ஊடுருவல்காரர்களை அடையாளம் காண்பது மட்டுமல்லாமல், அவர்களை வெளியேற்றுவோம். தேர்தல் ஆதாயத்திற்காக முதல்வர் மம்தா வங்கதேசத்தை சேர்ந்த ஊடுருவல்காரர்களுக்குத் துணைபோகிறார்.பாஜ ஆட்சி அமையும்
2026ல் மேற்குவங்கத்தில் பாஜ ஆட்சி அமையும். பாஜ இங்கு ஆட்சிக்கு வந்தவுடன், கிழக்கு எல்லைகள் வழியாக நடைபெறும் ஊடுருவலை நிறுத்தி, மாநிலம் புத்துயிர் பெறுவதை உறுதி செய்யும். மேற்கு வங்க அரசு எங்களுக்கு நிலம் வழங்காததால், வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் பணியை எங்களால் முடிக்க முடியவில்லை. மேற்குவங்க மக்கள் காங்கிரஸ், இடதுசாரிகள், திரிணமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு ஆட்சி செய்ய வாய்ப்பளித்துள்ளனர். பாஜவுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். மம்தா தலைமையிலான அரசின் ஊழல் காரணமாக மேற்குவங்கத்தில் வளர்ச்சி தடைப்பட்டுள்ளது. முன்னுரிமை
ஏழை மக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிப்போம். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ 17% ஓட்டுக்களையும், இரண்டு இடங்களையும் பெற்றது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி 10% ஓட்டுக்களையும் 3 சட்டசபை இடங்களையும் பெற்றது. 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ 41% ஓட்டுக்களையும் 18 இடங்களையும் பெற்றது. 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜ 21% ஓட்டுக்களையும் 77 இடங்களையும் பெற்றது. 2016ல் 3 இடங்களைப் பெற்ற கட்சி, ஐந்து ஆண்டுகளில் 77 இடங்களைப் பெற்றது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ 39% ஓட்டுக்களையும், 12 இடங்களையும் பெற்றது. 2026ல் மேற்குவங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் பாஜ ஆட்சி அமைக்கும். இவ்வாறு அமித்ஷா பேசினார்.