சபரிமலையில் நாணயங்கள் எண்ணுவதற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் செலவு
சபரிமலை:சபரிமலையில் நாணயங்களை எண்ணுவதற்கு இயந்திரம் வருவது தாமதமாவதால் தேவசம்போர்டுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவாகிறது.சபரிமலையில் ஆண்டுதோறும் காணிக்கை வருமானம் கூடிக் கொண்டிருக்கிறது. 2023-ல் இதே கால அளவில் 52.21 கோடி ரூபாய் வருமானமாக இருந்தது. தற்போது 9 கோடி ரூபாய் அதிகரித்து 61.41 கோடியாக உள்ளது. காணிக்கையாக பக்தர்கள் அதிகளவில் நாணயங்களையும் சமர்ப்பிக்கின்றனர். இதை எண்ணுவதற்காக தினமும் 150 தேவசம் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த ஊழியர்களுக்கு சுமார் ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. சீசன் முடிந்தாலும் மேலும் ஒரு மாதத்திற்கு நாணயங்கள் என்னும் பணி இங்கு நடைபெறும்.உண்டியலில் வரும் நோட்டு, நாணயங்கள், நகைகள் போன்றவற்றை தானியங்கி முறையில் தரம் பிரித்து எண்ணி மாற்றுவதற்கான இயந்திரம் வாங்க தேவசம்போர்டு முடிவு செய்தது. இதற்காக தஞ்சாவூரில் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வடிவமைத்த இயந்திரத்தை 3.45 கோடி ரூபாய் செலவில் வாங்க முடிவு செய்யப் பட்டது. திருப்பூரில் ஒரு தனியார் நிறுவனம் இதை தயாரித்து வழங்க உறுதி அளித்திருந்தது. கடந்த ஏப்ரல் விசு திருவிழாவின்போது இந்த இயந்திரத்தை இங்கு நிறுவவும் திட்டமிடப்பட்டிருந்தது.நாணயங்களை கழுவி வெப்ப காற்றில் காய வைத்து கேமரா மூலம் நாணயங்களை தரம் பிரித்து எண்ணும் வகையில் இந்த இயந்திரம் உருவமைக்கப்பட்டிருந்தது. ஒரு பக்தர் இதை தங்கள் வழிபாடாக சமர்ப்பிக்க சம்மதம் தெரிவித்திருந்த நிலையில் தேவசம் போர்டு திடீரென்று அதிலிருந்து விலகியது.இதனால் இயந்திரம் வருவது தாமதமாவதால் தேவசம்போர்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய் ஆண்டுதோறும் செலவாகிறது. தற்போது நாணயங்கள் என்னும் அறையில் உள்ள துாசு போன்றவற்றால் பெரும்பாலான ஊழியர்கள் பணியின் முழு கால அளவை நிறைவு செய்யாமல் ஊர் திரும்புகின்றனர்.