உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பைஜூஸ் திவால் நடவடிக்கையை நிறுத்தும் உத்தரவுக்கு கோர்ட் தடை

பைஜூஸ் திவால் நடவடிக்கையை நிறுத்தும் உத்தரவுக்கு கோர்ட் தடை

புதுடில்லி, 'பைஜூஸ்' நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்தி வைக்கும் தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு வழங்கிய தொகையை நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.இணையவழி கல்வி வழங்கும், பைஜூஸ் என்ற கல்வி தொழில்நுட்ப நிறுவனம், 2011ல் உருவாக்கப்பட்டது. கொரோனா காலத்தில் மிக வேகமாக இந்த நிறுவனம் வளர்ந்தது. இதற்கிடையே பல்வேறு நிதி சிக்கல்களில் சிக்கியதைத் தொடர்ந்து, பெரும் பொருளாதார இழப்புகளை சந்தித்தது. இதையடுத்து, திவாலானதாக அறிவிக்கக் கோரி அந்த நிறுவனம் விண்ணப்பித்திருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்தது தொடர்பாக வழங்க வேண்டிய, 158.9 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை வழங்க சமீபத்தில் உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திவால் நடவடிக்கையை திரும்பப் பெற விண்ணப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரித்த, தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், பைஜூஸ் நிறுவனத்துக்கு எதிரான திவால் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டிருந்தது.இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த, அமெரிக்காவைச் சேர்ந்த கிளாஸ் டிரஸ்ட் நிறுவனம், இந்த வழக்கில் தங்களையும் ஒரு தரப்பாக சேர்க்கக் கோரியது.இந்த விவகாரங்கள் தொடர்பான வழக்கை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகள் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியுள்ளதாவது:பைஜூஸ் நிறுவனத்தின் திவால் தொடர்பான வழக்குகளில், தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம், தேசிய கம்பெனி சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் ஒரு தரப்பாக இருக்க, அமெரிக்க நிறுவனத்துக்கு உரிமை உள்ளது.திவால் நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது தொடர்பாக, ஐ.ஆர்.பி., எனப்படும் திவால் தீர்மான நிபுணர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். நிறுவனங்களோ, கடன் வழங்கியவர்களோ அதற்காக விண்ணப்பிக்க முடியாது. அதனால், திவால் நடவடிக்கையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது செல்லாது.பைஜூஸ் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய மற்றவர்களின் கோரிக்கைகளும் பரிசீலிக்க வேண்டும். அதனால், பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துடன் உடன்பாடு ஏற்பட்டு, பைஜூஸ் நிறுவனம் செலுத்திய, 158.9 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை, கடனாளர்கள் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கும்வரை, அந்தத் தொகையை பயன்படுத்தக் கூடாது.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ