வழக்கை மாற்ற எத்னால் மனு சிவகுமாருக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
பெங்களூரு: கனகபுரா நீதிமன்றத்தில், தனக்கு எதிராக தொடர்ந்த வழக்கை, பெங்களூருக்கு மாற்றக்கோரி, பா.ஜ., - - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் தாக்கல் செய்த மனு தொடர்பாக, கர்நாடக உயர்நீதிமன்றம், துணை முதல்வர் சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பியது.கர்நாடகாவில் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு இருந்தபோது, 2019 ஜூன் 23ல், விஜயபுராவில், பா.ஜ., - எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஊடகத்தினர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர், 'சிவகுமார் எங்கள் கட்சி தலைவர்களை சந்தித்து, தன் மீது வருமான வரித்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் இருந்து காப்பாற்றும்படி கோரினார். எங்களின் மத்திய அமைச்சர்கள் மூலமாகவும் முயற்சித்தார். தன்னை வழக்குகளில் இருந்து விடுவிக்கும்படி செய்தால், கர்நாடகாவில் பா.ஜ., அரசு அமைக்க, தன் எதிர்ப்பு இருக்காது என கூறியதாக எனக்கு தகவல் வந்துள்ளது' என்றார்.இதை ஏற்றுக்கொள்ளாத சிவகுமார், 'பசனகவுடா எத்னாலின் பேச்சால், என் கவுரவம், இமேஜுக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. எனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு, 204 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கும்படி, அவருக்கு உத்தரவிட வேண்டும்' என கோரி, ராம்நகரின், கனகபுரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதற்கு ஆட்சேபம் தெரிவித்து, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் எத்னால் மனு தாக்கல் செய்துள்ளார். இதில், 'எனக்கு தொந்தரவு கொடுக்கும் ஒரே நோக்கத்தில், கனகபுரா நீதிமன்றத்தில் சிவகுமார் வழக்கு தொடர்ந்துள்ளார். நான் பேசியது விஜயபுராவில். இவர் கனகபுராவில் வழக்கு தொடுத்துள்ளார். நான் பா.ஜ., - எம்.எல்.ஏ., அக்கட்சியின் மூத்த தலைவன்.இந்த வழக்கை, கனகபுராவில் இருந்து, பெங்களூருக்கு மாற்ற வேண்டும். 2008லிருந்து சிவகுமார், கனகபுரா எம்.எல்.ஏ.,வாக இருக்கிறார். செல்வாக்குமிக்க அரசியல்வாதி. வழக்கின் சாட்சி, ஆதாரங்களை கலைக்கும் வாய்ப்புள்ளது. எனவே வழக்கை பெங்களூரு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும்' என கோரினார்.எத்னால் மனுவை, நேற்று விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சுனில்தத் யாதவ் தலைமையிலான அமர்வு, பிரதிவாதி சிவகுமாருக்கு அவசர நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டார். இந்த வழக்கு 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.