புதுடில்லி :நடுவர் மன்றங்கள் அளிக்கும் உத்தரவில் குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் நீதிமன்றங்கள் திருத்தம் செய்ய முடியும் என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சச்சரவுகள் மற்றும் பிரச்னைகளுக்கு நீதிமன்றங்களுக்கு செல்லாமல் மாற்று வழியில் தீர்வு காணும் வகையில் உருவாக்கப்பட்டது, நடுவர் மன்றம் மற்றும் சமரச சட்டம். கடந்த 1996ல் நடைமுறைக்கு வந்த இந்த சட்டத்தின் கீழ், பல நடுவர் மன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ், நடுவர் மன்றங்கள் அளிக்கும் உத்தரவுகளில், நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு குறைந்த வாய்ப்புகளே தரப்பட்டுள்ளன.இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வுக்கு பரிந்துரை செய்திருந்தது. அதன்படி, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையில் ஐந்து நீதிபதிகள் அமர்வு கடந்த பிப்., மாதத்தில் விசாரித்தது.இந்த வழக்கின் உத்தரவுகள் நேற்று பிறப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில், 4:1 என்ற பெரும்பான்மையுடன் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சஞ்சய் குமார், அகஸ்டின் ஜார்ஜ் மாஷி ஆகியோர் பெரும்பான்மை உத்தரவை வழங்கியுள்ளனர்.அதே நேரத்தில், நீதிபதி கே.வி.விஸ்வநாதன், நடுவர் மன்ற உத்தரவுகளை நீதிமன்றங்கள் திருத்த முடியாது என, உத்தரவில் கூறியுள்ளார்.இந்த உத்தரவை தொடர்ந்து, உள்நாடு மற்றும் சர்வதேச வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை தொடர்பான சச்சரவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.பெரும்பான்மை உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:நடுவர் மன்றம் மற்றும் சமரச சட்டத்தின் கீழ் நடுவர் மன்றங்கள் அளிக்கும் உத்தரவுகளில் நீதிமன்றங்கள் தலையிட முடியுமா என்ற சட்டக் கேள்விக்கு தற்போது விடை அளிக்கப்பட்டு உள்ளது.குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில், நடுவர் மன்றம் மற்றும் சமரச சட்டத்தின் பிரிவுகளின் கீழ், நடுவர் மன்றங்கள் அளித்த உத்தரவுகளை நீதிமன்றங்கள் திருத்த முடியும். ஆனாலும், இவ்வாறு திருத்தும்போது நீதிமன்றங்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும்.அரசியலமைப்பு சட்டத்தின் 142வது பிரிவு, உச்ச நீதிமன்றத்துக்கு சிறப்பு அதிகாரம் அளித்துள்ளது. ஆனாலும், இந்த சட்டத்தின் கீழ் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது, எழுத்துப் பிழை, கணக்குப் பிழை, அச்சுப் பிழை போன்றவற்றை மட்டுமே திருத்த முடியும். இதை நினைவில் கொள்ள வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.