நிதி மோசடியில் கிரிக்கெட் சங்கத்தினர் கைது
ஹைதராபாத்: நிதி மோசடி வழக்கில், எச்.சி.ஏ., எனப்படும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் ஜெகன் மோகன் ராவ் உட்பட ஐந்து பேரை, தெலுங்கானா சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர்.ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக ஜெகன் மோகன் ராவும், பொருளாளராக ஸ்ரீனிவாச ராவும், தலைமை நிர்வாக அதிகாரியாக சுனில் கான்டேவும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஏப்ரலில் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியின் போது, தங்களிடம் கூடுதல் இலவச டிக்கெட் கேட்டு மிரட்டல் விடுத்ததாக எச்.சி.ஏ., மீது, ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணி குற்றஞ்சாட்டியது.இவ்வாறு தொடர்ந்து மிரட்டல் விடுத்தால், நாங்கள் சொந்த மாநில போட்டியை வேறு மாநில மைதானத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும் என அந்த அணி நிர்வாகம், பி.சி.சி.ஐ., எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு கடிதம் எழுதியிருந்தது.ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை எச்.சி.ஏ., மறுத்தது. இந்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என சன்ரைசர்ஸ் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விஜிலென்ஸ் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட்டார்.விசாரணை அறிக்கை அடிப்படையில் ஜெகன் மோகன், ஸ்ரீனிவாச ராவ், சுனில் கான்டே மற்றும் இருவர் என ஐந்து பேரை, சி.ஐ.டி., போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் மீது பணம் கையாடல், தவறான நிர்வாகம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.