வாசகர்கள் கருத்துகள் ( 1 )
கொடுமையான செய்திகள்
மேலும் செய்திகள்
இந்தியா - சீனா இடையே அக்.,26 முதல் நேரடி விமான சேவை
1 hour(s) ago
கோவாவின் கோல்வாவில் உள்ள தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான விடுதி ஒன்றில் கவுரவ் கட்டியார், 29, மேலாளராக பணியாற்றி வந்தார். உத்தர பிரதேசத்தின் லக்னோவைச் சேர்ந்த இவர், ஓராண்டுக்கு முன்பு தீக் ஷா கங்வார் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தீக் ஷாவுக்கு வேறு ஒருவருடன் தொடர்பிருப்பதாக கவுரவ் கட்டியார் சந்தேகப்பட்டார். இது தொடர்பாக தம்பதி இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் உள்ள கபோ டி ராமா கடற்கரை பகுதிக்கு, தன் மனைவி தீக் ஷாவை, கவுரவ் அழைத்து சென்றார். ஆனால், அவர் மட்டுமே தனியாக திரும்பி வந்துள்ளார். அங்கிருந்த சிலருக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தவே, போலீசில் புகார் அளித்தனர். இது குறித்து கவுரவிடம் போலீசார் விசாரித்த போது, மனைவி கடலில் விழுந்து இறந்துவிட்டதாக அவர் கூறியுள்ளார்.இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், மனைவியை கடலில் தள்ளி கவுரவ் கொலை செய்தது, அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் எடுத்த வீடியோவில் பதிவாகி உள்ளது தெரியவந்தது. அதில் மனைவியுடன் கவுரவ் கடலுக்கு செல்வதும், பின்னர் தனியாக திரும்பி வருவதும், மனைவி இறந்ததை உறுதி செய்ய, மீண்டும் கடலில் சென்று அவர் பார்ப்பதும் பதிவாகி உள்ளது.அதுமட்டுமின்றி தாக்குதல் நடந்ததற்கான தடயங்களும் தீக் ஷாவின் உடலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியை கொலை செய்ததை கவுரவ் ஒப்புக் கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். மனைவி வேறு யாருடனோ தொடர்பு வைத்திருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவாக இந்த கொலை நடந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.---போதையில் மனைவியை கொன்ற கணவன் கைது
தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை அருகே சரபோஜிராஜபுரத்தை சேர்ந்தவர் வடிவேல், 47. இவரது மனைவி கவிதா, 38. இவர்களுக்கு, 13, 9 வயதில் குழந்தைகள் உள்ளனர். தஞ்சாவூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து மொத்தமாக வைக்கோல் வாங்கி, விற்பனை செய்து வந்தனர்.வைக்கோல் விற்பனை தொடர்பாக, நேற்று முன்தினம் இரவு, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுஉள்ளது. மது போதையில் இருந்த வடிவேல், ஆத்திரத்தில் அருகில் இருந்த மூங்கில் கட்டையால் கவிதாவை கடுமையாக தாக்கினார். பலத்த காயமடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். அய்யம்பேட்டை போலீசார், வடிவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.குடிபோதையில் தகராறு; சி.ஆர்.பி.எப். வீரர்கள் கைது
அரியலுார் மாவட்டம், கோடாலி கிராமத்தை சேர்ந்தவர் குமார் மனைவி சுகுமதி, 48. இவர், கடந்த 18ம் தேதி இரவு, கோடாலி பஸ் ஸ்டாப்பில், அவரது சகோதரர் ஹரிவாசனுடன் நின்று கொண்டிருந்தார். அப்போது, பஜாஜ் பைக்கில் வந்த மூன்று பேர், ஹரிவாசன் மீது மோதுவது போல வந்தனர். தட்டிக் கேட்டதால், சுகுமதியையும், ஹரிவாசனையும், மூவரும் தகாத வார்த்தைகளால் திட்டினர்.அங்கிருந்த கோடாலி கிராமத்தை சேர்ந்த கலைமணி, வெங்கடேசன், ரமேஷ்குமார் ஆகியோர், குடிபோதையில் இருந்தவர்களின் டூ - வீலரை பறித்து வைத்துக் கொண்டனர். ஆத்திரமடைந்த மூன்று பேரும் அங்கு கிடந்த செங்கற்களை எடுத்து, சுகுமதி தரப்பினர் மீது வீசினர். சுகுமதி தரப்பினரும் கற்களை வீசியதில், சுகுமதி, ராஜாத்தி ஆகியோர் படுகாயமடைந்தனர்.டி.பழூர் போலீசார், குடிபோதையில் இருந்த வாலிபர்களை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்ததில், ஆயுதகளம் கிராமத்தை சேர்ந்த மாரியப்பன், 37, மிசோரம் மாநிலத்தில், சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றுவதும், கார்த்திகேயன், 30, மஹாராஷ்டிரா மாநிலத்தில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றுவதும் தெரியவந்தது. அவர்களின் நண்பரான அருள்செல்வன், 37, சென்னையில் கேட்டரிங் சர்வீஸ் நடத்தி வருவது தெரிய வந்தது. ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் வழக்குப் பதிந்து, மூவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரிக்கிறார்.---மனை தகராறில் கத்திக்குத்து; பா.ம.க. ஒன்றிய செயலர் கைது
திருப்பத்துார் மாவட்டம், கந்திலி அடுத்த ஆம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த புஷ்பராஜ் மகன் சிவராமன், 27. கந்தகுப்பம் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார், 34. இருவரும், ஆம்பள்ளியில், அருகருகே வீட்டு மனை வாங்கியுள்ளனர். தற்போது பிரேம்குமார் கட்டடம் கட்டி வருகிறார். புஷ்பராஜுக்கும், பிரேம்குமாருக்கும் இரு நாட்களுக்கு முன், மனை தொடர்பாக தகராறு ஏற்பட்டது.பிரேம்குமாருக்கு ஆதரவாக கந்திலி, பா.ம.க., ஒன்றிய செயலர் கோவிந்தராஜ், 37, பேசும்போது, 'இந்த விவகாரத்தில் நீ தலையிடாதே' என கூறிய புஷ்பராஜை, கோவிந்தராஜ் தாக்கினார். தந்தையை தாக்கியதை அறிந்த மகன்கள் சிவராமன் மற்றும் அவரது அண்ணன் சிங்காரவேலன், 30, ஆகியோர் கடந்த, 19ல் இரவு, கோவிந்தராஜை இரும்பு கம்பியால் தாக்கினார்.ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்த சிவராமன், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கந்திலி போலீசார், கோவிந்தராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.---1.5 கிலோ தங்கம் பறிமுதல்
ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ஷார்ஜாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு, திருச்சி வந்த 'ஏர் இந்தியா' விமான பயணியரை, திருச்சி விமான நிலையத்தில், சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது, பெண் பயணி ஒருவரும், ஆண் பயணி ஒருவரும் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடந்து கொண்டதால், அதிகாரிகள் அவர்களை தனியே அழைத்துச் சென்று சோதனையிட்டனர்.அவர்கள் தங்கள் உடலில், 1.485 கிலோ தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம், 93.22 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை பறிமுதல் செய்தனர்.---வீடுகளை உடைத்து நகைகள் கொள்ளை
திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூர், பணகுடி அருகே பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வீரவநல்லூர் அருகே காருகுறிச்சியைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் 74. ஓய்வு பெற்ற தமிழாசிரியர். மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். வீட்டில் தனியாக இருந்த ராமசுப்பிரமணியன் ஜன., 17ல் சென்னையிலுள்ள மகள் வீட்டுக்கு சென்றார். அதை பயன்படுத்தி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 25 பவுன் நகைகள் மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். பணகுடி பாலாஜி நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வரதராஜன் வீட்டிலும் அவர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் பூட்டை உடைத்து 10 பவுன் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.தாயை கொன்ற மகன்
சிவகாசி முருகன்காலனியைச் சேர்ந்த செல்லப்பா மனைவி மரியரத்தினம். இவருக்கு மூன்று மகன்கள். இளைய மகன் மரிய சுந்தர்ராஜ் அச்சகத்தில் கூலி வேலை செய்கிறார். குடும்பத் தகராறில் இவரது மனைவி நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தொடர்ந்துள்ளார்.மரியசுந்தர்ராஜூக்கும், அவரது தாயாருக்கும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் தாயாரை மரிய சுந்தரம் இரும்பு கம்பியால் தாக்கினார். காயமடைந்த மரியரத்தினம் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார்.மரியசுந்தர்ராஜ் கதவைப் பூட்டி வீட்டிற்குள் பதுங்கியிருந்தார். போலீசார் வீட்டு கதவை உடைத்த போது மரியசுந்தர்ராஜ் காயமடைந்தார். அவர் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.---2 குழந்தைகளை கொன்ற தாய் கைது
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அடுத்த பீளமேடு கிராமத்தை சேர்ந்த தேவேந்திரன், 25, ஆட்டோ டிரைவரின் மனைவி சரண்யா, 21. இவர்களுக்கு தமிழ்யாழினி, 3, சஜித், 1, என இரு குழந்தைகள் இருந்தனர். தேவேந்திரனுக்கும், சரண்யாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.இதனால், கணவருடன் கோபித்து, கடந்த 15ம் தேதி காலை தன் இரு குழந்தைகளுடன் தாய் வீடான வடதொரசலுார் வந்தார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர், அன்று மாலை அதே பகுதியில் ஏரியை ஒட்டியுள்ள விவசாய கிணற்றில் தன் குழந்தைகளை வீசி கொலை செய்தார்.பின் அவரும், தற்கொலை செய்வதற்காக மரத்தின் மீது ஏறி விழுந்ததில் மயக்கம் அடைந்தார். தகவல் அறிந்து சென்ற தியாகதுருகம் போலீசார், தீயணைப்புத் துறையினர் உதவியுடன் கிணற்றில் இறந்து கிடந்த 2 குழந்தைகளின் உடல்களையும் மீட்டனர். மயங்கிக் கிடந்த சரண்யாவை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.இதுகுறித்து வி.ஏ.ஓ., சலீம் கொடுத்த புகாரின் படி, இரண்டு குழந்தைகளைக் கொலை செய்ததாக சரண்யா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சரண்யா குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து போலீசார் அவரை, நேற்று கைது செய்து, வேலுார் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
கொடுமையான செய்திகள்
1 hour(s) ago