UPDATED : மார் 02, 2025 05:02 PM | ADDED : மார் 02, 2025 04:12 PM
மும்பை: மஹாராஷ்டிராவில் , மஹா சிவராத்திரி அன்று நடந்த நிகழ்ச்சியின் போது, மைனரான தனது மகளிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டதாக மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன்துறை இணை அமைச்சர் ரக்ஷா கட்சே போலீசில் புகார் அளித்து உள்ளார். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.மஹாராஷ்டிரா மாநிலம் புனேயில் கடந்த சில நாட்களுக்கு முன்னர், இளம்பெண் ஒருவர் போலீஸ் ஸ்டேசன் அருகே பஸ்சுக்குள் வைத்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதனையடுத்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் ஜல்கோன் மாவட்ட போலீசாரிடம் மத்திய இணையமைச்சர் ரக்ஷா கட்சே, தனது மகளிடம் சிலர் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகார் அளித்து உள்ளார்.இதன் பிறகு அவர் கூறியதாவது: சிவராத்திரியை முன்னிட்டு கோதாலி பகுதியில் ஆண்டுதோறும் யாத்திரை நடக்கும். இதில் பங்கேற்க சென்ற எனது மகளுக்கு சிலர் தொந்தரவு அளித்ததுடன், தகாத முறையிலும் நடந்து கொண்டனர். வேறு சில சிறுமிகளுக்கும் பாலியல் ரீதியில் தொந்தரவு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க வந்தேன். நீதி கேட்டு ஒரு தாயாக வந்தேன். மத்திய அமைச்சராகவோ அல்லது எம்.பி., ஆகவோ இங்கு வரவில்லை என்றார்.இச்சம்பவம் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது: குற்றவாளி பல பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு உள்ளான். அதனை தடுக்க முயன்ற பாதுகாவலர்களிடமும் மோதலில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.