உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கட்சியில் இருந்து மகள் கவிதா சஸ்பெண்ட்: சந்திரசேகர ராவ் அதிரடி

கட்சியில் இருந்து மகள் கவிதா சஸ்பெண்ட்: சந்திரசேகர ராவ் அதிரடி

ஹைதராபாத்; பி.ஆர்.எஸ்., எனப்படும் பாரத் ராஷ்ட்ர சமிதியில் இருந்து தன் மகளும், எம்.எல்.சி.,யுமான கவிதாவை சஸ்பெண்ட் செய்து, அக்கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார். தெலுங்கானாவில், 2023 நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரசிடம் படுதோல்வி அடைந்தது. இதையடுத்து, காங்கிரசைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வர் ஆனார். தேர்தல் தோல்விக்கு பின், பாரத் ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ.,க்களில் சிலர், காங்கிரசில் இணைந்தனர். தொடர்ந்து, அக்கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. சந்திரசேகர ராவின் மகன் ராமா ராவ் தலைமையில் ஓரணியும், மகள் கவிதா தலைமையில் ஓரணியும் செயல்பட்டு வந்தன. இதனால், சந்திரசேகர ராவ் - கவிதா இடையே மோதல் வெடித்தது. பாரத் ராஷ்ட்ர சமிதி ஆட்சியில் கட்டப்பட்ட காலேஸ்வரம் அணை கட்டுமான முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி, சி.பி.ஐ.,க்கு முதல்வர் ரேவந்த் ரெட்டி சமீபத்தில் பரிந்துரைத்தார். இந்த வழக்கில், சந்திரசேகர ராவ், அவரது கட்சியைச் சேர்ந்த முன்னாள் நீர்வளத் துறை அமைச்சர் ஹரிஷ் ராவ் ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர். இதனால் அதிருப்தி அடைந்த கவிதா, ''தன் தந்தை சந்திரசேகர ராவின் இமேஜை, ஹரிஷ் ராவ், முன்னாள் எம்.பி., மேகா கிருஷ்ணா ரெட்டி ஆகியோர் கெடுக்கின்றனர். ''அவர்களால் தான், அவருக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. அவருடன் என்னை சேர விடாமல் தடுக்கின்றனர்,'' என குற்றஞ்சாட்டினார். சொந்த கட்சி நிர்வாகிகளையே, கவிதா வெளிப்படையாக குற்றஞ்சாட்டியது, அரசியலில் புயலைக் கிளப்பியது. இந்நிலையில், கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி, பாரத் ராஷ்ட்ர சமிதியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து, அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ