புதுடில்லி : மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி இருந்தபோது, சென்னையில் உள்ள அவரின் வீட்டிற்கு 300 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டதாகவும், அந்த இணைப்புகள் சன் 'டிவி'க்கு சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்ட புகார் குறித்து, நான்கு ஆண்டுகளுக்குப் பின், சி.பி.ஐ., விசாரணையை துவக்கியுள்ளது.
இது தொடர்பாக பி.டி.ஐ., செய்தி ஏஜன்சி வெளியிட்டுள்ள செய்தி:மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி பதவி வகித்த காலத்தில், சென்னையில் உள்ள அவரின் போட் ஹவுஸ் இல்லத்திற்கு, பி.எஸ்.என்.எல்., பொது மேலாளர் பெயரில், 323 தொலைபேசி இணைப்புகள் வழங்கப்பட்டன. சன்'டிவி' அலுவலகத்தில் இருந்து பூமிக்கு அடியில் தயாநிதியின் வீட்டிற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக கேபிள்கள் மூலம், இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம் சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டன. இந்த தொலைபேசி இணைப்புகள் எல்லாம், கட்டணம் அதிகமான ஐ.என்.டி.என்., வசதிகளை கொண்டிருந்தன. அதன் மூலம் சன் 'டிவி'க்குத் தேவையான தகவல்கள், செய்திகள் மற்றும் 'டிவி' நிகழ்ச்சிகள், உலகம் முழுவதிலும் இருந்து வெகு விரைவாகப் பெறப்பட்டன என்று சில தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக முதலில் விசாரணை நடத்திய சி.பி.ஐ., தொலைத்தொடர்பு செயலரிடம், அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அதில், 'தயாநிதியின் வீட்டிற்கு வழங்கப்பட்ட தொலைபேசி இணைப்புகள் எல்லாம், வர்த்தக நிறுவனங்களால், வீடியோ கான்பரன்சிங்கிற்கும், பெரிய அளவிலான டிஜிட்டல் தகவல்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் பயன்படுத்தப்பட்டுள்ளன.இவற்றுக்கு மற்ற நிறுவனங்கள் எனில், அதிக கட்டணம் செலுத்த நேரிடும். ஆனால், தயாநிதி அமைச்சர் பொறுப்பில் இருந்ததால், இவற்றை எல்லாம் சன் 'டிவி' இலவசமாக பயன்படுத்தியுள்ளது.
இந்த தொலைபேசி இணைப்புகள் மூலம் நடந்த பரிமாற்றங்கள் எல்லாம், பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் ஒருவரின் துணையோடு நடந்துள்ளன. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேறு யாருக்கும் இந்த விவரம் தெரியாது' என்றும் கூறப்பட்டிருந்தது.கடந்த 2007ம் ஆண்டில் சமர்ப்பித்த இந்த பரிந்துரைகள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, தொலைத்தொடர்புத் துறை செயலரையும் சி.பி.ஐ., கேட்டுக் கொண்டது. ஆனால், துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதனால், இந்த விவகாரம் தொடர்பாக, நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது முதற்கட்ட விசாரணை நடத்த சி.பி.ஐ., முடிவு செய்துள்ளது.