உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிமாச்சலில் மேக வெடிப்பு: பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு

ஹிமாச்சலில் மேக வெடிப்பு: பலி எண்ணிக்கை 69 ஆக உயர்வு

சிம்லா: ஹிமாச்சலில் மேகவெடிப்பால் பெய்த கனமழை காரணமாக, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை, 69 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளனர். 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை

நம் நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஹிமாச்சலின் மண்டி, காங்ரா, சம்பா, சிம்லா உள்ளிட்ட மாவட்டங்களில் மேக வெடிப்பு காரணமாக கடந்த 1ம் தேதி முதல் கனமழை பெய்தது.இதனால் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால், 100க்கும் மேற்பட்ட குடியிருப்பு கட்டடங்கள் சேதமடைந்தன; சாலையோரங்களில் நிறுத்தப்பட்ட ஏராளமான வாகனங்கள் மண்ணில் புதைந்தன.கனமழை, நிலச்சரிவு உள்ளிட்டவற்றால் இதுவரை, 69 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் மட்டும் 17 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேபோல், 300க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.

இருளில் மூழ்கின

அங்குள்ள ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், 14 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. 500க்கும் மேற்பட்ட சாலைகள் மூடப்பட்டு உள்ளன. இதுதவிர, பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், ஏராளமான கிராமங்கள் இருளில் மூழ்கின. கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை, 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளதாக மாநில காங்., அரசு தெரிவித்துள்ளது. இதற்கிடையே, ஹிமாச்சலில் வரும் 7ம் தேதி வரை கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துஉள்ளது.இந்நிலையில் கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் உதவிக்கரம் நீட்டப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை