டில்லி சட்டசபை கட்டடம் பாரம்பரிய நினைவு சின்னம்
புதுடில்லி:'டில்லி சட்டசபை கட்டடத்தை பாரம்பரிய நினைவுச் சின்னமாக மாற்றும் முயற்சிக்கு, மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். டில்லி சட்டசபை கட்டடம் மட்டுமின்றி, பிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும் பாரம்பரிய சின்னங்களாக மாற்ற, மத்திய அரசு தயாராகவே உள்ளது' என, மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.டில்லி சட்டசபை சபாநாயகர் விஜிந்தர் குப்தாவுக்கு, கலாசாரத்துறை அமைச்சர் ஷெகாவத் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:டில்லி சட்டசபை கட்டடத்தை பாரம்பரியம் மிக்க மையமாக மாற்றும் தங்களின் முயற்சியை அறிந்து மகிழ்ச்சி அடைந்தேன். மாநில அரசின் இத்தகைய முயற்சிக்கு, மத்திய அரசு எப்போதும் துணை நிற்கும். அதுமட்டுமின்றி, நாட்டின் பிற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்களையும் பாரம்பரிய சின்னங்களாக மாற்ற மத்திய அரசு தயாராகவே உள்ளது.டில்லி சட்டசபை கட்டடம், ஒரு முக்கியமான அடையாள சின்னம். நாட்டின் முக்கிய அரசியல் வரலாற்றின் ஒரு அங்கம் அது. மேலும், அந்த கட்டடத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டடக்கலை, உலகப் புகழ் பெற்றது.அதை உலகம் முழுவதும் பிரபலமாக்கும் வகையில், நீங்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும், இப்போது மட்டுமல்ல, எப்போதும் மத்திய அரசு துணை நிற்கும்.மேலும், கலாசார சுற்றுலாவிற்கான வாய்ப்புகள், டில்லியில் அதிகம் உள்ளன. அதையும் மத்திய அரசு பரிசீலித்து, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்.இதுகுறித்து, கடந்த மே 23 மற்றும் ஜூன் 3ம் தேதி நான் நடத்திய கூட்டங்கள் மற்றும் சந்திப்புகள், உங்களின் எண்ணத்திற்கு மேலும் வலு சேர்க்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.