உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டில்லி சட்டசபை தேர்தல் வியூகம் நட்டா, அமித்ஷா உடன் ஆலோசனை

டில்லி சட்டசபை தேர்தல் வியூகம் நட்டா, அமித்ஷா உடன் ஆலோசனை

சாணக்யாபுரி:கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் மாநில பா.ஜ., தலைவர்கள் சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினர்.டில்லி சட்டசபைக்கு வரும் பிப்ரவரியில் தேர்தல் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆலோசிக்க மாநில பா.ஜ., தலைவர்கள் திங்கட்கிழமை இரவு கட்சியின் தேசியத் தலைவர் நட்டாவை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.இந்த சந்திப்பின்போது மத்திய உள்துறை அமைச்ச அமித்ஷாவும் இருந்தார். மாநில தலைவர் வீரேந்திர சச்தேவா, தெற்கு டில்லி எம்.பி., ராம்வீர் சிங் பிதுரி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, முன்னாள் எம்.பி.,க்கள் பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா, ரமேஷ் பிதுரி உள்ளிட்ட மாநில பா.ஜ., தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.டில்லி சட்டசபை தேர்தலுக்கு வகுக்க வேண்டிய வியூகம், தற்போதுள்ள அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக மாநில கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.உறுப்பினர் சேர்க்கை அடுத்த மாதம் முதல் வாரத்தில் நிறைவடைகிறது. அதன் பின், சட்டசபை தேர்தல் பிரசாரத்தை துவக்க பா.ஜ., திட்டமிட்டுள்ளது.கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.,க்கள் தலைமையில் 70 சட்டசபைத் தொகுதிகளிலும் பரிவர்தன் யாத்திரை நடத்தவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இதற்கான பட்டியல் தயாரிக்கும் பணியை மாநில நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். பட்டியல் தயாரான பிறகு மேலிட ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அதன்பின் முறைப்படி அறிவிப்பு வெளியாகும் என, கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்தார்.அக்டோபர் 5ம் தேதி நடைபெறும் ஹரியானா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு, தேசியத் தலைவர்களுடன் டில்லி பா.ஜ., தலைவர்கள் மீண்டும் சந்தித்து ஆலோசிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !