ராணுவ அதிகாரி என கூறி டில்லி டாக்டரிடம் மோசடி
புதுடில்லி:டில்லி அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் ஒருவரிடம், ராணுவ அதிகாரி என தன்னை அறிமுகம் செய்த நபர், 6.69 லட்ச ரூபாயை ஏமாற்றினார். ஜலாலுதீன் என்ற ஜல்லி என்ற ராஜஸ்தான் நபர், டில்லி அப்பல்லோ மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் ஒருவரை சந்தித்து ஆசை வார்த்தை கூறினார். அதில், தான் ராணுவத்தில் பணியாற்றுவதாகவும், தினமும் 25க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களின் மருத்துவ அறிக்கையை பார்த்து கையொப்பம் இட்டால் போதும் என கூறினார். அவர் கூறியதை உண்மை என நம்பிய அந்த டாக்டர், 6.69 லட்ச ரூபாயை கொடுத்தார். அதன் பின் தான், இதுபோல பல தொழில் வல்லுநர்களை ஏமாற்றி, பல கோடி ரூபாயை அந்த ராஜஸ்தான் நபர் மோசடி செய்துள்ளது தெரிந்தது. போலீசில் டாக்டர் அளித்த புகாரின் படி, அந்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, மொபைல் போன்கள் போன்றவையே பறிமுதல் செய்யப்பட்டன. டாக்டரை ஏமாற்றி பெற்ற பணம் கைப்பற்றப்படவில்லை.