உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மனைவியை துப்பாக்கியால் சுட்டவருக்கு ஜாமின் மறுப்பு ஆணாதிக்க மனப்பான்மையை சட்டம் அங்கீகரிக்காது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மனைவியை துப்பாக்கியால் சுட்டவருக்கு ஜாமின் மறுப்பு ஆணாதிக்க மனப்பான்மையை சட்டம் அங்கீகரிக்காது டில்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடில்லி:'உங்களுடன் வாழ மறுத்தார் என்பதற்காக, மனைவியை துப்பாக்கியால் சுடுவது, தாக்குவது போன்ற செயல்களை ஏற்க முடியாது. இதுபோன்ற ஆணாதிக்க மனப்பான்மையை சட்டம் அங்கீகரிக்காது' என கூறி, டில்லியைச் சேர்ந்த நபருக்கு, டில்லி உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்க மறுத்தது. டில்லியைச் சேர்ந்த ஒருவருக்கும், அவரது மனைவிக்கும் கடந்த, 2018ல் தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதை அடுத்து, அந்த நபர், தன் மனைவியை துப்பாக்கியால் சுட்டார். இதில் படுகாயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயிற்றில் குண்டு பாய்ந்ததால், நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று, அறுவை சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். இதற்கிடையே, மனைவியை துப்பாக்கியால் சுட்டதற்காக கைது செய்யப்பட்ட நபர், தனக்கு ஜாமின் வழங்கக் கோரி, டில்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவில் அவர் கூறியிருந்ததாவது: என் மனைவி, என்னுடன் வாழ மறுத்து பிடிவாதம் பிடித்தார். எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நீண்ட நேர வாக்குவாதத்துக்கு பின், கோபம் அடைந்து, மனைவியை சுட்டேன் . மற்றபடி, அவரை கொலை செய்யும் நோக்கம் எதுவும் இல்லை. ஆறு ஆண்டுகளாக சிறையில் உள்ளேன். எனவே, எனக்கு ஜாமின் வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவிட்டதாவது: குடும்ப தகராறு என கூறி, வன்முறையை எந்த வகையிலும் நியாயப் படுத்த முடியாது. உங்களுடன் வாழ மறுத்தார் என்பதற்காக, உங்கள் மனைவியை துப்பாக்கியால் சுடுவதையும், தாக்குவதையும் ஏற்க முடியாது; இது, ஆணாதிக்க மனப்பான்மையின் பிரதிபலிப்பு. இதுபோன்ற நடவடிக்கைகளை சட்டம் அங்கீகரிக்காது. மேலும், நீங்கள் வைத்திருந்த துப்பாக்கிக்கு உரிமம் பெறவில்லை. இதுவும் சட்டவிரோத செயல். எனவே, உங்களுக்கு ஜாமின் வழங்க முடியாது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இந்த வழக்கை ஆறு மாதங்களுக்குள் விசாரித்து தீர்ப்பு அளிக்கும்படி, சம்பந்தபட்ட நீதிமன்றத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை