உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாப் அரசு பெயர் பொறித்த காரில் கட்டுக்கட்டாக பணம், மதுபானங்கள் பறிமுதல்

பஞ்சாப் அரசு பெயர் பொறித்த காரில் கட்டுக்கட்டாக பணம், மதுபானங்கள் பறிமுதல்

புதுடில்லி: 'பஞ்சாப் அரசு' என பெயர் பொறிக்கப்பட்ட காரில் கட்டுக்கட்டாக பணம், உயர் ரக மதுபானங்கள், ஆம் ஆத்மியின் துண்டு பிரசுரங்களை டில்லி போலீசார் நேற்று பறிமுதல் செய்தனர். டில்லியில் முதல்வர் ஆதிஷி தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு பிப்., 5ம் தேதி தேர்தல் நடக்க இருக்கிறது. இதையொட்டி தலைநகர் முழுதும் உஷார்படுத்தப்பட்டு, தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் முக்கிய இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 'கோபர்னிக்கஸ் மார்க்'கில் அமைந்துள்ள பஞ்சாப் அரசுக்கு சொந்தமான பஞ்சாப் பவனில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, பறக்கும் படையினர் நேற்று முன்தினம் இரவு சோதனை செய்தனர். அப்போது, அங்கு நின்றிருந்த 'பி.பி. - 35 ஏ.இ.1342' பதிவெண் கொண்ட பஞ்சாப் அரசு பெயர் பொறிக்கப்பட்ட காரில் இருந்து, 10 லட்சம் ரூபாய் ரொக்கம், உயர் ரக மதுபானங்கள், ஆம் ஆத்மியின் துண்டு பிரசுரங்கள் கண்டெடுக்கப்பட்டன. பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் நிலையில், டில்லி தேர்தலையொட்டி அங்கிருந்து பணம் மற்றும் மதுபானங்கள் எடுத்து வரப்பட்டதாக தேர்தல் பறக்கும் படையினர் சந்தேகித்தனர்.இது குறித்து அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடகம்

இதற்கு மறுப்பு தெரிவித்த ஆம் ஆத்மி தலைமையிலான பஞ்சாப் அரசு, பா.ஜ., மீது குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இது முழுக்க முழுக்க போலியாக அரங்கேற்றப்பட்ட செயல். டில்லியில் உள்ள பஞ்சாப் பவன் வளாகத்தில் இருந்த காரில் இருந்து பணம், மதுபானங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த கார் பஞ்சாப் பவனுக்குள் நுழைந்ததற்கான பதிவோ, ஆதாரமோ எதுவும் இல்லை. பறிமுதல் செய்யப்பட்ட கார் பதிவெண்படி அது, 'போர்ட் ஈகோஸ்போர்ட்' வகையைச் சேர்ந்ததாகும். அத்துடன், டில்லி போலீசார் பறிமுதல் செய்த காரோ 'ஹூண்டாய் க்ரெடா' வகையாகும். இந்த விஷயம், பஞ்சாப் போக்குவரத்து அலுவலக பதிவுகளின்படி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவெண் உடைய கார், பஞ்சாபின் பதான்கோட்டில் உள்ள ராணுவ பல் மருத்துவக் கல்லுாரியில் பணியாற்றும் ஒருவருக்கு சொந்தமானது. அவர் இப்போது, மஹாராஷ்டிராவின் காட்கியில் நிரந்தரமாக வசித்து வருகிறார்.

சாதாரண பதிவெண்

அரசு உத்தரவின்படி, அனைத்து வாகனங்களிலும் உயர் ரக பாதுகாப்பு பதிவெண் பலகை அவசியம். ஆனால், போலீசார் பறிமுதல் செய்த காரில் சாதாரண பதிவெண் பலகையே உள்ளது.பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் பஞ்சாப் அரசுக்கு எந்த வகையிலும் சொந்தமானதல்ல. இது, திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட நாடகம் என்பது தெளிவாகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
ஜன 31, 2025 11:48

கெஜ்ரிவால் மற்றும் இண்டி கூட்டணி அன்பர்களுக்கு அனுபவம் பத்தாது. அனைவரும் தமிழகம் வந்து ஒரு ஆறு மாதங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஏதோ ஒரு மாநிலத்தில் திருடுவதற்கு பயிற்சி கொடுக்கிறார்களாம். அதிலும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் ஏடிஎம் திருட்டு வங்கி திருட்டு வீட்டு திருட்டு உண்டாம். அது போல தமிழகத்திலும் சிறப்பு பயிற்சி வகுப்புகள் கனிம வள கொள்ளை கல்லூரி கொள்ளை மணல் கொள்ளை இந்து மத கோயில்கள் சொந்தமான நிலங்கள் அபகரிப்பது எப்படி பெண்களை பாலியல் சீண்டல் செய்து அந்த பெண்கள் மீதே வழக்கை திசை திருப்பும் செயல்கள் செய்வது எப்படி மதுவை வகை வகையாக எப்படி எல்லாம் விற்பனை செய்வது இது போன்று பல வகுப்புகள் இங்கு தமிழகத்தில் நடத்தப்படுகிறது. அணைத்து இண்டி கூட்டணி என்று சொல்லிக் கொண்டு தங்கள் இஷ்டப்படி தனித் தனியே செயல் படும் அனைவரும் தமிழகம் வந்து கற்று தேர்ந்து செல்லலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை