டெங்குவுக்கு சிறுவன் பலி டாக்டர்கள் மீது குற்றச்சாட்டு
துமகூரு: டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியானார். இவருக்கு டெங்கு இருப்பதை டாக்டர்கள் தெரிவிக்கவில்லை என, பெற்றோர் குற்றஞ்சாட்டி போராட்டம் நடத்தினர்.துமகூரு, பாவகடாவின், பாமைய்யன குடி வீதியில் வசிப்பவர் ஹரிஷ் குமார். இவரது மகன் கருணாகரன், 7, சில நாட்களாக கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார். இவரை பெற்றோர், பாவகடாவின் தனியார் கிளீனிக்கில் சேர்த்தனர்.பரிசோதனையில் சிறுவனுக்கு டெங்கு இருப்பது உறுதியானது. இதை டாக்டர்கள், பெற்றோரிடம் கூறாமல் சிகிச்சையை தொடர்ந்தனர்.எட்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன், நேற்று உயிரிழந்தார். அதன் பின்னரே மகனுக்கு டெங்கு இருந்தது, பெற்றோருக்கு தெரிந்தது. டாக்டர்களின் அலட்சியமே மகனின் இறப்புக்கு காரணம் என, கோபமடைந்து கிளீனிக் எதிரே போராட்டம் நடத்தினர். நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினர்.