பெங்களூரு: “யாரையும் விட்டு வைக்காமல், அனைவரையும் கவர பா.ஜ., முயற்சிக்கிறது. நாங்கள் முடிவு செய்தால், பல கட்சிகள் காலியாகிவிடும்,” என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரைத் தொடர்ந்து, லட்சுமண் சவதியை இழுக்க பா.ஜ., முயற்சித்து வருகிறது.இதுதொடர்பாக, பெங்களூரில் நேற்று துணை முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:லட்சுமண் சவதி, எங்கள் கட்சியின் தலைவர்; முக்கிய சொத்து. அவர் காங்கிரசிலேயே நீடிப்பார்.'எங்கள் சித்தாந்தத்தில் உள்ளவர்களை அழைத்து வருவோம்; காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர்' என, பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில் குமார் கூறியுள்ளார்.முதலில், காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.,க்கள், செயல் வீரர்கள் அனைவரும் அக்கட்சியின் சித்தாந்தத்துடன் உடன்படுகின்றனரா என்று கேட்டுப் பாருங்கள். எத்தனை பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள், எங்களுடன் தொடர்பில் உள்ளனர் என்ற பட்டியலை தரட்டுமா?யாரையும் விட்டுவைக்காமல், அனைவரையும் கவர பா.ஜ., முயற்சிக்கிறது. அந்த வேலை எங்களுக்கும் தெரியும். நாங்கள் முடிவு செய்தால், பல கட்சிகள் காலியாகிவிடும்.'நாங்கள் உயர் அதிகாரிகளின் அடிமைகள்' என, கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணாவின் பேச்சை கவனத்தில் கொண்டுள்ளோம். அவரது வார்த்தைகளை கட்சித் தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவர் அமைச்சராக இருப்பதால், முதல்வர் பதில் அளிப்பார்.பா.ஜ.,வின் செய்தி தொடர்பாளராக குமாரசாமி செயல்படுகிறார். பா.ஜ.,வை ஆட்சியில் இருந்து விலக்கி வைக்க, நிபந்தனையற்ற ஆதரவு அளித்து குமாரசாமியை முதல்வராக்கினோம்.கூட்டணி ஆட்சி கவிழ்ந்தபோது, பா.ஜ.,வுக்கு எதிராக பேசிய குமாரசாமி பதில் சொல்ல வேண்டும். அவர் அரசியலில் இருப்பதற்காக வெட்கப்படுகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.