உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னா ஹசாரேவுடன் தேஷ்முக் சந்திப்பு

அன்னா ஹசாரேவுடன் தேஷ்முக் சந்திப்பு

புதுடில்லி : ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா உருவாக்க வலியுறுத்தி, உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியவாதி அன்னா ஹசாரேயை, மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக் நேற்று சந்தித்து பேசினார். மத்திய அரசு பிரதிநிதியாக தேஷ்முக், ஹசாரேயை நேரடியாக தொடர்பு கொண்டு, உண்ணாவிரதத்தை கைவிடும்படி பிரதமர் தெரிவித்த கருத்துக்களை எடுத்து வைத்தார்.

ஹசாரே குழுவுடன் மத்திய அரசு நடத்திய இரண்டாவது சுற்று பேச்சு வார்த்தையில், எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, நேற்று காலை ஹசாரேயை சந்தித்து பேசுவதற்கு, மத்திய அரசு நேரடியாக நடவடிக்கை மேற்கொண்டது. ஹசாரேயின் சொந்த மாநிலமான, மகாராஷ்டிராவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வரும் ஹசாரேயை நேற்று பிற்பகல் சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பு, 20 நிமிடங்கள் வரை நீடித்தது. பிரதமர் தெரிவித்த தகவல்களை ஹசாரேயிடம் விலாஸ்ராவ் எடுத்துக் கூறினார். உண்ணாவிரதத்தை முடிக்குமாறு, பார்லிமென்ட் மற்றும் பிரதமர் வலியுறுத்தியுள்ளதையும் தெரிவித்தார். உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டு, வேறு வழிகளில் போராட்டத்தை தொடரும்படியும் கேட்டுக் கொண்டார்.

இச்சந்திப்புக்கு பின், மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை, விலாஸ்ராவ் சந்தித்து, ஹசாரேயுடன் நடந்த சந்திப்பு குறித்து எடுத்துரைத்தார். பின்னர் நிருபர்களிடம் பேசிய விலாஸ்ராவ் கூறுகையில், ''பார்லிமென்டில் பிரதமர் பேசியதை பரிசீலிக்குமாறு ஹசாரேயிடம் கேட்டுக் கொண்டேன். மேலும், லோக்பால் மசோதா தொடர்பான சர்ச்சைகள் குறித்த விவாதத்தை பார்லிமென்டில் உடனடியாக துவக்கலாம் என்றும் ஹசாரேயிடம் தெரிவித்தேன்,'' என்றார்.

பிரதமருக்கு ஹசாரே கடிதம்: இச்சந்திப்பின் போது, பிரதமருக்கு கடிதம் ஒன்றை ஹசாரே கொடுத்து அனுப்பினார். இது பற்றிய தகவல்களை வெளியிட்ட மனிஷ் சிசோதியா, கடித விவரம் பற்றி தெரிவிக்க மறுத்துவிட்டார். பிரதமரிடமிருந்து பதில் கடிதம் வந்ததும், அது பற்றி விரிவாக வெளியிடப்படும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை