புதுடில்லி: 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் நாள்தோறும் மோசடிகள் அரங்கேறி வரும் நிலையில், 'சட்டத்தில் அது போன்ற நடவடிக்கை இல்லை' என, விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் வங்கிகள், காவல் துறை ஈடுபட்டுள்ளன. மோசடி நம் நாட்டில், 'டிஜிட்டல் கைது' என்ற பெயரில் சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூத்த குடி மக்களை குறிவைத்து இந்த மோசடி நடக்கிறது. போலீஸ், அமலாக்கத் துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், 'மொபைல் போன் வீடியோ' அழைப்பு மூலம், பொதுமக்களை மிரட்டி பணம் பறிப்பதே டிஜிட்டல் கைது எனப்படுகிறது. அதாவது, வீடியோ அழைப்பில் தோன்றும் நபர், 'உங்களது வங்கிக் கணக்கு சட்ட விரோதப் பணப் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டு உள்ளது. போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் உங்களுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. உங்களை டிஜிட்டல் முறையில் கைது செய்துள்ளோம். இந்த வழக்கு முடியும் வரை நாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்புங்கள். வழக்கு முடிந்ததும் உங்கள் பணம் திரும்ப ஒப்படைக்கப்படும்' என, ஏமாற்றுகின்றனர். ஏமாற வேண்டாம் இதை நம்பி பலர் பணத்தை அனுப்புகின்றனர். நாடு முழுதும், 2022ல், 10.29 லட்சம் டிஜிட்டல் கைது மோசடி வழக்குகள் பதிவான நிலையில், 2024ல், 22.68 லட்சம் வழக்குகள் பதியப்பட்டு உள்ளன. 2022 - 2025 பிப்., வரை, 2,576 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளது. இந்நிலையில், டிஜிட்டல் கைது தொடர்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில், ரிசர்வ் வங்கி உட்பட பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அனைத்து வங்கிகளும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு, 'சட்டத்தில், டிஜிட்டல் கைது என்ற நடவடிக்கை இல்லவே இல்லை. 'யாரும் அதை நம்பி ஏமாற வேண்டாம். அது போன்ற அழைப்புகள் வந்தால், 1930 எண்ணை உடனடியாக தொடர்பு கொள்ளவும்' என, குறுஞ்செய்தி மூலம் எச்சரித்துள்ளன. மும்பை போலீசாரும் இதுகுறித்து, குடி யிருப்பு நலச்சங்கங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.