மேலும் செய்திகள்
பா.ஜ.,வின் அடுத்த தலைவர் யார்?
17-Nov-2024
முதல்வர் வேட்பாளர் யார்?அடுத்தாண்டு பிப்ரவரி 15ம் தேதிக்கு முன்பாக டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். எனவே, ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் உள்ளன. இதற்கான பூர்வாங்க வேலைகளை தேர்தல் கமிஷன் துவக்கி விட்டது. இந்த மாத இறுதியில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதுதற்போது ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, சிறைக்கு சென்று, தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இவர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சியின் ஆதிஷி முதல்வராக உள்ளார்.மீண்டும் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்பது சந்தேகம் தான். ஆம் ஆத்மி கட்சியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.பா.ஜ.,வில் முதல்வர் வேட்பாளராக, மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜின் மகள் பன்சுரி சுவராஜ் அறிவிக்கப்படலாம் என பேசப்படுகிறது. 40 வயதாகும் பன்சுரி, புதுடில்லி எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரது தாயார் சுஷ்மாவும் டில்லி முதல்வராக சில காலம் பணியாற்றிஉள்ளார்.'வயதில் இளையவர், படித்தவர், வக்கீலாக உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிகிறார். எனவே, இவர் தான் பா.ஜ., முதல்வர் வேட்பாளர்' என, கட்சி தலைவர்களுக்குள் பேச்சு அடிபடுகிறது. என்ன தான் மற்ற மாநிலங்களிலும், லோக்சபா தேர்தலிலும் பா.ஜ., வெற்றி பெற்றாலும், டில்லியில் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. ஆனால், 'இந்த முறை எப்படியாவது பா.ஜ.,வை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என, உள்துறை அமைச்சர் அமித் ஷா விரும்புகிறார். இதனால், டில்லி பா.ஜ.,வின் பொறுப்பாளராக, அமித் ஷாவை நியமித்துள்ளாராம், பா.ஜ.,வின் தேசிய தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா.வெற்றியில் இவருக்கும் பங்குண்டு!மஹாராஷ்டிராவில் பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதற்கு, துணை முதல்வராக உள்ள தேவேந்திர பட்னவிஸ் தான் முக்கிய காரணம். ஆனால், 'மஹாராஷ்டிராவின் பார்வையாளராக, பா.ஜ., சார்பில் நியமிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவும் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார்' என, கட்சிக்குள் பேசுகின்றனர். பூபேந்திர யாதவுடன், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.அமித் ஷாவிற்கு மிகவும் நெருக்கமானவர் யாதவ்; தேர்தல் பணியாற்றுவதில் தேர்ந்தவர். லோக்சபா தேர்தலில் மஹாராஷ்டிராவில் பா.ஜ., பெரும் தோல்வியைத் தழுவியது. 48 தொகுதிகளில் பா.ஜ., ஒன்பதில் மட்டுமே வெற்றி பெற்றது. அப்போதே, மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் யாதவ். உடனே களத்தில் இறங்கியவர், 'கட்சி தலைவர்கள் தங்களுக்கிடையே உள்ள மோதலைத் தவிர்த்து ஒற்றுமையாக வேலை செய்ய வேண்டும்' என கேட்டுக் கொண்டதுடன், அதற்கான திட்டங்களையும் வகுத்துக் கொடுத்தார். இதனால் ஒற்றுமை ஏற்பட்டது. தவிர ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்கள் மஹாராஷ்டிராவில் களம் இறங்கியபோது, அவர்களுடன் ஒருங்கிணப்பில் ஈடுபட்டார் யாதவ். 'இப்படி, வெற்றிக்கு வித்திட்ட முக்கியமான தலைவர்களில், பூபேந்திர யாதவும் ஒருவர் என்றாலும், அதிகம் வெளியே தெரியாமல், அமைதியாக பணியாற்றி வருகிறார்; விரைவில் இதற்கான பரிசை கட்சி தலைமை இவருக்கு அளிக்கும்' என, சொல்லப்படுகிறது.உதயநிதியை தொடர்ந்து...!தமிழகத்தில் உதயநிதி துணை முதல்வராக நியமிக்கப்பட்டதை அடுத்து, வேறொரு மாநிலத்திலும் மற்றொரு வாரிசு துணை முதல்வராகலாம் என, பேச்சு அடிபடுகிறது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இவருடைய, திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலராக இருப்பவர், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜி, 37. 'இவரை துணை முதல்வராக்க வேண்டும்' என, கட்சிக்குள் ஒரு கோஷ்டி கொடி பிடித்துள்ளது. 'கட்சி பதவிகளுக்கு இளைஞர்களை நியமிக்க வேண்டும்' என விரும்புவர் அபிஷேக் பானர்ஜி. கட்சிக்குள் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்தும், மம்தாவிற்கு ஒரு அறிக்கை அளித்துள்ளார். ஆனால், கட்சியின் மூத்த தலைகள் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அபிேஷக்கின் தீவிர ஆதரவாளர் பரத்பூர் எம்.எல்.ஏ.,வான ஹுமாயூன் கபீர். கோல்கட்டா மருத்துவமனையில் ஒரு பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம், அதைத் தொடர்ந்து கோல்கட்டா நகர கார்ப்பரேஷன் கவுன்சிலர் மீது நடந்த தாக்குதல், ஆட்சியில் உள்ள ஏகப்பட்ட ஊழல் என, அனைத்தையும் சுட்டிக்காட்டிய கபீர், 'இதையெல்லாம் கட்டுக்குள் கொண்டு வர, இளைஞரான அபிஷேக் துணை முதல்வராக நியமிக்கப்பட வேண்டும்' என, கோரிக்கை விடுத்துஉள்ளார்.ஆனால், அபிேஷக்கை துணை முதல்வராக்க, மூத்த தலைவர்கள் மறைமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திண்டாடும் ஒடிசா முதல்வர்!கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவின் முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் கட்சி, மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பா.ஜ.,விடம் தோல்வியடைந்தது; மோகன் சரண் மஜி பா.ஜ.,வின் முதல்வரானார். நவீன் பட்நாயக் மிகப் பெரிய தலைவர்; அவரது ஆட்சியில் பல நலத்திட்டங்கள் அரங்கேறின. ஊழலும் இல்லை. அவருக்கு ஆலோசனை அளிக்க மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் எந்த நேரமும் அவருடனே இருந்தனர். நவீனைத் தொடர்ந்து பதவியேற்ற மஜிக்கு, ஆலோசனை அளிக்க சரியான அதிகாரிகள் இல்லையாம்; இதனால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மாற்றியுள்ளார் மஜி.'மத்திய அரசில் பணியாற்றி வரும் மூத்த ஒடிசா கேடர் அதிகாரிகளான, மனோஜ் குமார் சாஹு மற்றும் சஞ்சீப் குமார் ஆகியோரை ஒடிசாவுக்கு அனுப்ப வேண்டும்' என, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார், மஜி. அக்டோபர் மாதம், 55 ஐ.பி.எஸ்., அதிகாரிகளை பணி மாற்றம் செய்தார்; தற்போது 11 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மாற்றப்பட்டனர்.பல மூத்த அதிகாரிகள் முக்கிய துறைகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். திரிலோசன் மஜி என்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி உள்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலராக நியமிக்கப்பட்டு உள்ளார்.கும்பமேளாவிற்கு பிரச்னை வருமா?உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மஹா கும்பமேளா, 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது வழக்கம். இந்த மஹா மேளாவின்போது, புனித நதிகளான கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமமாகும் பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் நீராடுவது ஹிந்துக்களின் வழக்கம்.'அர்த் கும்பமேளா' எனப்படும் அரை கும்பமேளா ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது.வரும் 2025ல் நடக்கப்போவது மஹா கும்பமேளா; 2013ம் ஆண்டிற்கு பின் நடைபெறுகிறது. உலகின் பல நாடுகளிலிருந்து மக்கள் கூட்டம் இங்கு வரும். 15 கோடி பேர் இந்த கும்பமேளாவில் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜனவரி மத்தியில் துவங்கி பிப்ரவரி வரை கும்பமேளா நடைபெற உள்ளது. பகவான் விஷ்ணு, அமிர்த கலசத்தை எடுத்துச் செல்லும்போது, அந்த கலசத்திலிருந்து ஒரு சில துளிகள் நான்கு இடங்களில் விழுந்ததாம்; அதில், இந்த பிரயாக்ராஜும் ஒரு இடம் என்கின்றன புராணங்கள். அப்போதிலிருந்தே மஹா கும்பமேளா கொண்டாடப்படுகிறதாம்.'பா.ஜ., மத்தியில் ஆட்சி அமைத்த பின் வரும் முதல் மஹா கும்பமேளா என்பதால், சிறப்பான முறையில் எந்த பிரச்னையும் இல்லாமல் நடைபெற வேண்டும்' என, விரும்புகிறாராம் பிரதமர். அதனால், அனைத்து அமைச்சர்களையும் இந்த மஹா கும்பமேளா ஏற்பாடுகளுக்கு உதவும்படி கட்டளையிட்டு உள்ளார்.மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி, கும்பமேளாவில் பங்கேற்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளாராம். டில்லியில் உள்ள அனைத்து வெளிநாட்டு துாதரகங்களுக்கு கடிதம் எழுதி, 'இந்த மாபெரும் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டுள்ளாராம்.'இந்த மேளா அமைதியாக நடக்க வேண்டும்' என, வேண்டுகின்றனர் பா.ஜ., தலைவர்கள். 'எதிர்க்கட்சியான சமாஜ்வாதி ஏதாவது பிரச்னை ஏற்படுத்தி, கலவரம் ஏற்படுத்தலாம்' என, அஞ்சுகின்றனர். 'ஆனால், எந்தவித பிரச்னையும் இருக்காது' என கூறும் உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், அனைத்து ஏற்பாடுகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.
17-Nov-2024