உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரயிலில் சக பயணிகளுடன் தகராறு டி.ஐ.ஜி., மீது விசாரணை நடத்த உத்தரவு

ரயிலில் சக பயணிகளுடன் தகராறு டி.ஐ.ஜி., மீது விசாரணை நடத்த உத்தரவு

திருவனந்தபுரம் : ரயிலில் சக பயணிகளிடம் அவமரியாதையாக நடந்து கொண்டு கைது செய்யப்பட்ட டி.ஐ.ஜி., மீது ஆரம்பக் கட்ட விசாரணை மேற்கொள்ள மாநில போலீஸ் டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார். டி.ஐ.ஜி., மீது பயணிகள் புகார் தெரிவிக்க மறுத்து விட்டதால், ரயில்வே போலீசாரே அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் பேரூர்கடா பகுதியைச் சேர்ந்தவர் இ.ஜே.ஜெயராஜ், 53. இவர், 29ம் தேதி பிற்பகல், திருச்சூரில் இருந்து கோழிக்கோடு-திருவனந்தபுரம் ஜனசதாப்தி எக்ஸ்பிரசில், 'ஏசி' பெட்டியில் ஏறினார். ரயிலில் ஏறும்போதே அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் அவரை இருவர் கைத்தாங்கலாக தூக்கி வந்து இருக்கையில் உட்கார வைத்தனர். ரயில் சிறிது தூரம் சென்றதும், அவருக்கு முன்னால் அமர்ந்திருந்தவர் தன் லேப்-டாப்பை சார்ஜ் செய்வதற்காக பிளக்கில் செருகியிருந்தார். அதை அகற்றுமாறு டி.ஐ.ஜி., அங்கிருந்த சக பயணிகளிடம் கூறினார். ஆனால், அதன் உரிமையாளர் அப்போது இருக்கையில் இல்லை என்பதால் பிற பயணிகள் அதை செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், லேப்-டாப்பை வெளியே எறிய முயன்றார். அதை பார்த்த சக பயணிகள் தடுத்து நிறுத்தியதால், அவருக்கும் சக பயணிகளுக்கும் இடையே வாக்குவாதமும், தகராறும் ஏற்பட்டது. ரயில் எர்ணாகுளம் டவுன் ரயில் நிலையத்தை அடைந்ததும், ரயில்வே போலீசார், அவரை கைது செய்தனர். இரவில் அவரை ஜாமினில் விடுவித்தனர். இச்சம்பவம் குறித்து பயணிகள் யாரும் போலீசாரிடம் புகார் தெரிவிக்க மறுத்து விட்டதால், ரயில்வே போலீசாரே, மது அருந்தி பொது இடத்தில் தகராறு செய்ததாக வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் குறித்து முதல் கட்ட விசாரணை நடத்துமாறு மாநில போலீஸ் டி.ஜி.பி.,ஜேக்கப் புன்னூஸ் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவின்படி, நுண்ணறிவுப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி., ஹேமச்சந்திரன் விசாரணை நடத்த உள்ளார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கைகளை அவர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை