பதவி கிடைக்காத பெலகாவி காங்கிரசார் ஏமாற்றம் அமைச்சர்கள் பனிப்போரால் மேலிடம் எரிச்சல்
பெலகாவியில் அமைச்சர்கள் சதீஷ் ஜார்கிஹோளி, லட்சுமி ஹெப்பால்கர் இடையேயான 'பனிப்போர்' காரணமாக, முக்கியமான நியமனங்களை காங்கிரஸ் மேலிடம் நிறுத்திவைத்துள்ளது.பெலகாவியில் யாருக்கு செல்வாக்கு என்பதில் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவாளர் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கும், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவாளர் அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கருக்கும் இடையே நீண்ட நாட்களாகவே பனிப்போர் நிலவிவருகிறது. 34 பேருக்கு பதவி
கடந்த சட்டசபை தேர்தலில் சீட் மறுக்கப்பட்டவர்கள், வெற்றி வாய்ப்பை இழந்தவர்கள், அமைச்சர் பதவி கிடைக்காதவர்களுக்கு வாரியங்கள், கார்ப்பரேஷன் தலைவர், துணைத்தலைவர் உள்ளிட்ட பதவி வழங்க சித்தராமையா அரசும், காங்கிரஸ் மேலிடமும் தீர்மானித்தன. முதல் கட்டமாக 34 எம்.எல்.ஏ.,க்களுக்கு வாரிய பதவிகள் வழங்கப்பட்டன.இரண்டாவது கட்டமாக, நேற்று முன்தினம் 44 கார்ப்பரேஷன்கள், வாரியங்களின் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சியினர் நியமிக்கப்பட்டனர்.ஆனால், பெலகாவி மாவட்டத்தின் பி.யு.டி.ஏ., என்ற பெலகாவி நகர வளர்ச்சி ஆணையம் மற்றும் சி.ஏ.டி.ஏ., என்ற கட்டளை பகுதி வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றுக்கான தலைவர் பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.கர்நாடகாவில் 18 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மிகப்பெரிய மாவட்டம் பெலகாவி. இங்கு காங்கிரஸ் தலைவர்கள் இடையே ஏற்பட்டு உள்ள பூசலால், பெலகாவியில் உள்ள காக்வாட் எம்.எல்.ஏ., ராஜுகாகே, பைலஹொங்கல் எம்.எல்.ஏ., மஹாந்தேஜ் கவுஜலகி உட்பட யாருக்கும் கார்ப்பரேஷன், வாரிய தலைவர்கள் பதவி வழங்கப்படவில்லை.பெலகாவியை சேர்ந்த சில எம்.எல்.ஏ.,க்கள், இங்குள்ள முக்கிய கவுன்சில்களின் தலைவர்களாக நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் இரு அமைச்சர்கள் இடையேயான பனிப்போர், மேலும் அதிகரிக்கும் என்பதை உணர்ந்த மூத்த தலைவர்கள், அறிவிப்பை முடக்கி உள்ளனர். ஆறு பேர்
சதீஷ் ஜார்கிஹோளி மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருப்பதால், பெலகாவி மாவட்டத்தில் உள்ள உயர் பதவிகளில் தனக்கு வேண்டிய ஆறு பேரை நியமிக்க, அவர்களை பெயரை மேலிடத்தில் கொடுத்துள்ளராம்.ஒருவேளை பெலகாவி பட்டியல் வெளியிடும் பட்சத்தில், அதனால் லோக்சபா தேர்தலில் ஏற்படும் நெருக்கடியை போக்கவே, மாநில காங்கிரஸ் மேலிட தலைவர்கள், நியமனத்தை நிறுத்தி வைத்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், பெலகாவியில் பதவியை எதிர்பார்த்து காத்திருந்தோர் அதிருப்தி அடைந்து உள்ளனர்.- நமது நிருபர் -