உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீது... அதிருப்தி! ராகுலிடம் புகார் அளிக்க முதல்வர் தரப்பு முடிவு

காங்., மேலிட பொறுப்பாளர் சுர்ஜேவாலா மீது... அதிருப்தி! ராகுலிடம் புகார் அளிக்க முதல்வர் தரப்பு முடிவு

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக, முதல்வர் சித்தராமையா தரப்பு அதிருப்தியில் உள்ளது. அவரது செயல்பாடுகள் குறித்து, ராகுலிடம் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளனர்.அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர், ரன்தீப்சிங் சுர்ஜேவாலா. ஹரியானாவை சேர்ந்த இவர், அம்மாநிலத்தில் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர் பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது கட்சியின் பொது செயலராகவும், ராஜ்யசபா எம்.பி.,யாகவும் இருக்கிறார். கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக உள்ளார்.இவரது வழிகாட்டுதலின் கீழ் 2023 சட்டசபை தேர்தலில், மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, சிவகுமார் இடையில் பிரச்னை ஏற்பட்ட போது, இருதரப்புக்கும் இடையில் பாலமாக இருந்து பிரச்னையை தீர்த்து வைத்தார்.இருதரப்பினர் சொல்லும் கருத்துகளை காது கொடுத்து கேட்டு, மேலிடத்திற்கு தெரிவித்து வந்தார். ஆனால், சமீபகாலமாக அவரது நடவடிக்கையில் மாற்றம் தெரிவதாக, சித்தராமையா தரப்பு கூறுகிறது. அதாவது சிவகுமார் தரப்புக்கு ஆதரவாக, ரன்தீப்சிங் சுர்ஜேவாலா செயல்படுகிறார் என்பது சித்தராமையா தரப்பின் குற்றச்சாட்டு.முதல்வரின் ஆதரவாளரான உள்துறை அமைச்சர் பரமேஸ்வர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டில் எஸ்.சி., - எஸ்.டி., சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். இந்த விருந்தின் போது, தலித் முதல்வர் பற்றிய பேச்சு அடிபடலாம் என்று சுதாரித்து கொண்ட சிவகுமார், மேலிட தலைவர்கள் மூலம், விருந்தை நிறுத்தினார்.

முக்கிய பங்கு

விருந்து நிறுத்தப்பட்டதில் சுர்ஜேவாலாவுக்கும் முக்கிய பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் அவர் மீது பரமேஸ்வர், ராஜண்ணா, சதீஷ் ஜார்கிஹோளி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.கடந்த 13ம் தேதி முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. அப்போது பெலகாவியில் காங்கிரஸ் பவன் கட்ட அமைச்சர் லட்சுமியின் முயற்சி தான் காரணம் என்று, சிவகுமார் தேவையின்றி வாயை விட்டார்.இதனால், கோபம் அடைந்த சதீஷ், 'காங்கிரஸ் பவன் கட்டியதில் எங்கள் குடும்பத்தின் பங்களிப்பும் உள்ளது' என்றார். இதனால் சிவகுமார், சதீஷ் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த கூட்டத்தில் இருந்த சுர்ஜேவாலா, சிவகுமாரை எதுவும் சொல்லாமல், சதீஷை மட்டும் சமாதானப்படுத்த முயன்றதாகவும் கூறப்படுகிறது.முதல்வர், மாநில தலைவர் பதவி குறித்து பேசியதால், சதீஷுக்கு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது.ஆனால், அது பற்றி தனக்கு எதுவுமே தெரியாது என்று சுர்ஜேவாலா கூறினார். இது, சதீஷ் தரப்புக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியது.இந்நிலையில், ஒருதரப்புக்கு ஆதரவாக செயல்படுவதாக சுர்ஜேவாலா மீது, ராகுலிடம் புகார் அளிக்க, சித்தராமையா தரப்பு முடிவு செய்துள்ளது. அவரது ஆதரவு அமைச்சர்கள் சிலர் விரைவில் டில்லி சென்று, ராகுலை சந்தித்து, சுர்ஜேவாலா குறித்து புகார் தெரிவிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

நிலை என்ன?

இதனால் சுதாரித்து கொண்ட சுர்ஜேவாலா, நேற்று முன்தினம் பெலகாவியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், சித்தராமையாவுடன் நெருக்கமாக இருப்பதை போன்று காட்டி கொண்டார். ஆனாலும், அவரை நம்ப சித்துவின் ஆதரவாளர்கள் தயாராக இல்லை.ஒருவேளை சுர்ஜேவாலாவுக்கு எதிராக ராகுலிடம் புகார் அளித்து, மேலிட பொறுப்பாளர் பதவியில் இருந்து அவரை மாற்ற வேண்டும் என்று சித்து தரப்பு கூறினால், சுர்ஜேவாலாவுக்கு ஆதரவாக ராகுலிடம் பேச்சு நடத்த சிவகுமார் தரப்பும் தயாராகி வருகிறது.இதற்காக, தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு இப்போது இருந்தே கொம்பு சீவும் பணியில் சிவகுமார் ஈடுபட்டு உள்ளார். இன்னும் சில நாட்களில் சுர்ஜேவாலாவின் நிலை என்ன என்பது தெரிந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி