தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பில்லை: பார்லி.,யில் தம்பிதுரை பேச்சால் கூச்சல் குழப்பம்
“தமிழகத்தில் மருத்துவர்கள் தாக்கப்படுகின்றனர்; மருத்துவமனைகள் ரவுடிகளால் சூறையாடப்படுகின்றன,” என என்று தம்பிதுரை பேசியதால், ராஜ்யசபாவில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.ராஜ்யசபாவில், அ.தி.மு.க., - எம்.பி., தம்பிதுரை நேற்று பேசியதாவது: பிரதமர் மோடி, தன் பதவிக் காலத்தில், 1,20,000 எம்.பி.பி.எஸ்., மருத்துவ இளநிலை படிப்பு இடங்களை அறிவித்தார். தற்போது, மேலும் 70,000 இடங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை வரவேற்கிறேன். எம்.பி.பி.எஸ்., இடங்களை போலவே, முதுகலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களையும் அதிகரிக்க வேண்டும். சுகாதாரத் துறையில், தமிழகம் மிகச்சிறந்து விளங்கி வருகிறது. இதற்கு காரணம், அ.தி.மு.க., ஆட்சிதான். 'பேபி கேர்'
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தொட்டில் குழந்தை திட்டம், கர்ப்பிணியருக்கும் குழந்தைகளுக்கும் பல்வேறு பராமரிப்பு பொருட்கள் அடங்கிய, 'பேபி கேர்' எனப்படும் பரிசு பெட்டகம் வழங்கும் திட்டம், அம்மா இன்சூரன்ஸ் திட்டம், அம்மா பார்மஸி என நிறைய கொண்டு வரப்பட்டன. ஆனால், தி.மு.க., அரசு, இவற்றையெல்லாம் சீரழித்து விட்டது. பழனிசாமி முதல்வராக இருந்தபோது, 11 மருத்துவக் கல்லுாரிகள், தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டன.ஆனால், தி.மு.க., ஆட்சிக் காலத்தில், ஒரு மருத்துவக் கல்லுாரிகூட கொண்டு வரப்படவில்லை. அதற்கான முயற்சியும் எடுக்கப்படவில்லை. மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துவதில், தி.மு.க., அரசு, முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது. வெற்று பேப்பர்
தி.மு.க., அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான், 'நீட்' தேர்வை கொண்டு வந்தது. ஆனால், தற்போது அதை ரத்து செய்வோம் என நாடகமாடுகின்றனர். நீட் தேர்வை ரத்து செய்ய கையெழுத்து இயக்கம் நடத்திய தி.மு.க., வெற்று பேப்பர்களை வைத்து இன்று வரை அரசியல் செய்கிறது.எல்லாவற்றையும் தவறாகவே செய்துவிட்டு, பார்லிமென்டுக்கு வந்து நாடகமாடுகிறது, தி.மு.க., தமிழகத்தில் நடைபெற்று வரும் தி.மு.க., ஆட்சியில், மருத்துவர்கள் தாக்கப்படுகின்றனர்; ரவுடிகளால் மருத்துவமனைகள் சூறையாடப்படுகின்றன. டாக்டர்களுக்கு பாதுகாப்பில்லை. எனவே, மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தம்பிதுரை பேசும்போது, ராஜ்யசபா தலைவர் நாற்காலியில் அமர்ந்து சபையை வழிநடத்தியவர் தி.மு.க., - எம்.பி., வில்சன். தி.மு.க., அரசை, தம்பிதுரை சரமாரியாக தாக்கிப் பேசிக் கொண்டிருக்க, அவரை எதிர்த்து மற்ற தி.மு.க., - எம்.பி.,க்கள் கொந்தளித்து கூச்சலிட்டனர். ஆனால், வில்சனோ எதுவும் செய்ய முடியாமல் திகைத்தபடியே, தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். -நமது டில்லி நிருபர்-