| ADDED : நவ 19, 2024 09:30 PM
புதுடில்லி: நிதி தொடர்பான ஆலோசனை அல்லது முதலீட்டு திட்டங்கள் குறித்து போலியாக தயார் செய்யப்பட்ட 'டீப் பேக்' வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.பொய்யான தகவல்களை கொண்டும், போலியான உருவங்களை பயன்படுத்தியும், ஏராளமான 'டீப் பேக்' வீடியோக்கள் தயார் செய்யப்படுகின்றன. இவற்றின் மூலம் பொதுமக்களை ஏமாற்றும் செயல்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.சமீபகாலமாக, நிதி ஆலோசனை, முதலீட்டு ஆலோசனை வழங்குவது போல, போலியான வீடியோக்களும் வெளியாகின்றன. இது பற்றி ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ரிசர்வ் வங்கி, நிதி தொடர்பான ஆலோசனை அல்லது முதலீடு திட்டங்கள் குறித்து எந்தவித ஆலோசனைகளும் பொதுமக்களுக்கு அளிக்கவில்லை. ஆகவே, போலியாக உலா வரும் 'டீப் பேக்' வீடியோக்களை நம்பக்கூடாது.நவீன ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் மூலம் ஆர்.பி.ஐ., சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறியதாக, போலியாக உருவாக்கப்பட்ட படங்கள், ஆடியோ அல்லது வீடியோக்கள் பரவி வருகின்றன. அவற்றிலிருந்து பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும்.அபாயங்கள் என்ன இது போன்ற போலி வீடியோக்கள் பொதுமக்களுக்கு கணிசமான ஆபத்துக்களை ஏற்படுத்துகின்றன. ரிசர்வ் வங்கி போன்ற நம்பகமான அமைப்பின் அதிகாரிகள் கூறுவதாக வரும் அத்தகைய வீடியோவை நம்பி, மோசடி திட்டங்களில் முதலீடு செய்தால் நிதி இழப்பு நேரிடும்.தரவுத் திருட்டு: தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி தொடர்பான தகவல்களைத் திருட மோசடி செய்பவர்கள் இத்தகைய வீடியோக்களையும், லிங்க்குகளையும் பயன்படுத்தலாம்.நம்பிக்கை இழப்பு: இந்த 'டீப் பேக்' மோசடி வீடியோக்கள், உண்மையான நிறுவனங்கள் மற்றும் அவற்றின் அதிகாரிகள் மீது பொதுமக்களின் நம்பிக்கையை சேதப்படுத்தும். எனவே, முதலீட்டு ஆலோசனை அல்லது திட்டங்களை எப்போதும் பல்வேறு இடங்களில் விசாரணை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட வேண்டும் அல்லது துல்லியமான தகவலுக்கு அவர்களின் ஹெல்ப்லைனைத் தொடர்பு கொள்ளலாம்.சமூக ஊடகங்களில் கவனமாக இருங்கள்: சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கும் அனைத்தையும், குறிப்பாக பணம் கேட்கும் வீடியோக்கள் அல்லது செய்திகள் அல்லது திட்டங்களை விளம்பரப்படுத்துவதை நம்பக்கூடாது.சரிபார்க்கப்படாத ஆதாரங்கள் அல்லது தளங்களுடன் தனிப்பட்ட அல்லது நிதி, வங்கி தொடர்பான விவரங்களைப் பகிர்ந்து கொள்ளக்கூடாது.இதுபோன்ற போலி வீடியோக்களை நீங்கள் கண்டால், அவற்றை சமூக ஊடக தளத்திற்குப் புகாரளித்து, அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.