உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வரம்பு மீறாதீர்கள்! சபாநாயகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வரம்பு மீறாதீர்கள்! சபாநாயகர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தெலுங்கானாவில், ஆளும் காங்கிரசுக்கு தாவிய பாரத் ராஷ்ட்ர சமிதி எம்.எல்.ஏ.,க்கள் 10 பேரை தகுதி நீக்கம் செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்கும்படி அம்மாநில சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத் குமாருக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும், சபாநாயகரின் முடிவுகள் மீது நீதிமன்றங்கள் தலையிடாது என்பதற்காக, அவர்கள் வரம்பு மீறிய அதிகாரத்தை அனுபவிப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலுங்கானாவில், 2023ல் நடந்த சட்டசபை தேர்தலில், பாரத் ராஷ்ட்ர சமிதியிடம் இருந்து ஆட்சி அதிகாரத்தை காங்., கைப்பற்றியது. அக்கட்சியின் ரேவந்த் ரெட்டி முதல்வரானார். இதையடுத்து, பாரத் ராஷ்ட்ர சமிதியின் 10 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசில் இணைந்தனர். காலக்கெடு அவர்கள் அனைவரையும் கட்சி தாவல் சட்டத்தில் தகுதிநீக்கம் செய்யும்படி, தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் கடம் பிரசாத் குமாரிடம் பாரத் ராஷ்ட்ர சமிதி சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த பாரத் ராஷ்ட்ர சமிதி, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. விசாரித்த தனி நீதிபதி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிவெடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் பாரத் ராஷ்ட்ர சமிதி, பா.ஜ., ஆகிய கட்சிகள் மேல் முறையீடு செய்தன. அதில், 'கட்சி தாவிய எம்.எல்.ஏ.,க்களை தகுதிநீக்கம் செய்யாமல், தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் காலம் தாழ்த்துகிறார். முடிவெடுக்க அவருக்கு உத்தரவிட வேண்டும்' என, குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி கே.வினோத் சவுகான் அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்ட தாவது: நாங்கள் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்றால், அது சபாநாயகரை விமர்சிக்க வழிவகுத்து விடும். அதாவது, 'ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது; நோயாளி இறந்து விட்டார்' என்ற சொலவடைக்கு ஏற்றதாகிவிடும். இந்த விவகாரத்தில், தெலுங்கானா சட்டசபை சபாநாயகர் மூன்று மாதங்களில் முடிவெடுக்க வேண்டும். கட்சி தாவல் தேசிய அளவில் பேசப்படும் ஒரு விஷயமாக இருக்கிறது. அதை கட்டுப்படுத்தாவிட்டால் ஜனநாயகத்தை சீர்குலைத்து விடும். இது போன்ற விவகாரங்களில், சட்டசபை சபாநாயகர்கள் நடுநிலையுடன் செயல்பட வேண்டும். சபாநாயகரின் முடிவுகள் மீது நீதிமன்றங்கள் தலையிடாது என்பதற்காக, அவர்கள் வரம்பு மீறிய அதிகாரத்தை அனுபவிப்பதை ஏற்க முடியாது. மறு ஆய்வு தகுதிநீக்க விவகாரங்களில், நீதிமன்றங்களில் தாமதம் ஏற்படும் என்பதால் தான், இதில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டம் சபாநாயகருக்கு வழங்கி உள்ளது. ஆனால், அதே தாமதத்தை சபாநாயகரே செய்வதை ஏற்க முடியாது. அரசியலமைப்பின் 10வது அட்டவணையின் கீழ், தகுதிநீக்க விவகாரங்களில் முடிவெடுப்பதில், ஒரு தீர்ப்பாயமாகவே சபாநாயகர் செயல்படுகிறார். இந்த அதிகாரம் தற்போது கவனிக்கக்கூடியதாக மாறியிருக்கிறது. தகுதிநீக்க விவகாரத்தில், தற்போதைய வழிமுறையை பார்லிமென்ட் மறு ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.- டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை