உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நகைக் கடைகளில் திருடிய போதை தம்பதி சிக்கினர்

நகைக் கடைகளில் திருடிய போதை தம்பதி சிக்கினர்

புதுடில்லி:நகைக் கடைகளுக்கு வாடிக்கையாளர் போல சென்று, தங்க நகைகளைத் திருடிய தம்பதி கைது செய்யப்பட்டனர். இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் துவாரகா துணைக் கமிஷனர் அங்கித் சிங் கூறியதாவது: டில்லியில் புராரி, பஸ்சிம் விஹார், ஐ.எஸ்.பி.டி., மார்க்கெட், லஜ்பத் நகர், கான் மார்க்கெட் மற்றும் துவாரகா ஆகிய இடங்களில் ஏப்ரல் மாதம் முதல் ஏழு நகைக்கடைகளில் திருட்டு நடந்தது. கண்காணிப்பு கேமரா இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர். மேலும், திருட்டு நடந்த கடைகளின் கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன. ஒரு தம்பதி நகை வாங்குவது போல வந்து, நகைகளை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரும் ஒரு குறிப்பிட்ட முறையை பின்பற்றி திருட்டை அரங்கேற்றியுள்ளனர். கடைக்காரர்களிடம் கணவன் சுவாரஸ்யமாக பேசி கவனத்தை திசை திருப்புவார். அந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி மனைவி, நகைகளை திருடி பைக்குள் மறைத்து விடுவார். மேலும், இருவரும் அடிக்கடி தங்கள் தோற்றத்தையும் மொபைல் எண்களையும் மாற்றிக் கொண்டே வந்தனர். ஜூலை மாதம் துவாரகாவில் உள்ள ஒரு நகைக் கடையில் நடந்த திருட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தியபோது, நகைகளை திருடுவது பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸைச் சேர்ந்த ராஜிவ்,35, மற்றும் அவரது மனைவி சன்யா, 34, என அடையாளம் காணப்பட்டது. சைபர் கிரைம் போலீஸ் உதவியுடன் இருவரின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர். கிடுக்கிப்பிடி விசாரணை அவர்களிடம் இருந்து, ஒரு தங்க மோதிரம், ஒரு ஜோடி தங்கக் கம்மல், ஒரு லாக்கெட் மற்றும் 8,000 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான இருவரும் பஞ்சாபில் பல திருட்டுக்களை செய்து விட்டு டில்லிக்கு இடம்பெயர்ந்துஉள்ளனர். இங்கு, நகைக் கடைகளை குறிவைத்து திருடி, கல்காஜியில் ஒரு கடையில் விற்றதை ஒப்புக் கொண்டனர். இருவரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !