மெடிக்கல்களில் கேமரா பொருத்த மருந்து விற்பனையாளர்கள் எதிர்ப்பு
புதுடில்லி:'டில்லியில் உள்ள அனைத்து மெடிக்கல்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, டில்லி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு, மருந்து பொருட்கள் விற்பனை கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் போதை பொருள் புழக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதை தடுப்பது குறித்து, தேசிய போதை பொருள் தடுப்பு அமைப்பைச் சேர்ந்த அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதன் அடிப்படையில் டில்லி அரசுக்கு சில பரிந்துரைகள் அளிக்கப்பட்டன. இதன்படி, 'குறிப்பிட்ட சில நோய்களுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரை மற்றும் மருந்துகளை வாங்கி, ஒரு கும்பல், போதை பழக்கத்துக்காக பயன்படுத்துகிறது. எனவே, டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் யாருக்கும் மருந்து விற்பனை செய்யப்படக் கூடாது. 'சர்ச்சைக்குரிய மருந்து, மாத்திரைகளை யார் வாங்கிச் செல்கின்றனர் என்பதை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், டில்லியில் உள்ள அனைத்து மெடிக்கல்களிலும் கட்டாயம் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்' என, டில்லி சுகாதாரத்துறை சார்பில் சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், டில்லியில் உள்ள சில்லரை மருந்து பொருள் விற்பனை கூட்டமைப்பு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இந்த கூட்டமைப்பின் தலைவர் சந்தீப் நங்கியா கூறியதாவது: மெடிக்கல்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தச் சொல்லும் உத்தரவு, எங்கள் கடைகளுக்கும் வரும் நோயாளிகளின் தனி உரிமையை மீறும் வகையில் உள்ளது; சட்ட ரீதியாகவும் இந்த உத்தரவு பொருந்தாது. நோயாளிகள் நேரடியாக மெடிக்கல்களுக்கு வந்து மருந்து வாங்குவதை, இந்த உத்தரவு தடுத்து விடும். ஆன்லைன் வாயிலாக மருந்து வாங்கும் நடவடிக்கைகள் அதிகரிக்கும். போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால், ஆன்லைனில் மருந்து வாங்குவதற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதுடன், போதிய விதிமுறைகளையும் வகுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.