| ADDED : ஜூலை 13, 2025 11:53 PM
புதுடில்லி: உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க முன்னாள் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான துஷ்யந்த் தவே, 70, வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.குஜராத்தைச் சேர்ந்த துஷ்யந்த் தவே, 1977ல், குஜராத்தின் ஆமதாபாதில் வழக்கறிஞர் பணியை துவக்கினார். 1990களில் தலைநகர் டில்லிக்கு குடிபெயர்ந்த அவர், குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு விவகாரங்களில் நீதிமன்றங்களில் ஆஜரானார்.கடந்த 1994ல், உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். கடந்த 2014, 2019 மற்றும் 2020ல், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார். 40 ஆண்டுகளாக வழக்கறிஞர் தொழிலில் கொடிகட்டி பறக்கும் துஷ்யந்த் தவே, உச்ச நீதிமன்றத்தில் பல முக்கிய அரசியலமைப்பு மற்றும் பொதுநலன் சார்ந்த வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடி உள்ளார். அவர் ஆஜரான முக்கிய வழக்குகளில், '2ஜி' ஸ்பெக்ட்ரம், வியாபம் ஊழல் உள்ளிட்டவை அடங்கும்.இந்நிலையில், வழக்கறிஞர் பணியில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாகவும், இனி, நீதிமன்றத்தில் வாதாடப் போவதில்லை என்றும், வழக்கறிஞர்கள் சங்கத்துக்கு, 'வாட்ஸாப்' வாயிலாக, துஷ்யந்த் தவே நேற்று செய்தி அனுப்பியுள்ளார்.
குற்றவியல் மற்றும் அரசியலமைப்பு சட்ட விவகாரங்களில் மிக முக்கிய வழக்கறிஞரான துஷ்யந்த் தவே, நீதிமன்றத்தில் ஒருமுறை ஆஜராவதற்கு, 5- - 6 லட்சம் ரூபாய் வரை பெரும் சம்பளம் வாங்கியுள்ளார்.