பெங்களூரு, மைசூரில் ஈ.டி., 2வது நாளாக சோதனை
மைசூரு : 'முடா' முறைகேடு
'முடா' முறைகேடு தொடர்பாக பெங்களூரு, மைசூரில் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்றும் சோதனை நடத்தினர்.முடா நிலம் ஒதுக்கீடு செய்ததில் 4,000 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. சோதனை
இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றமும் நடந்திருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் கங்கராஜ் அளித்த புகாரில், அமலாக்கத்துறை விசாரிக்கிறது.கடந்த 18, 19ம் தேதிகளில் முடா அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. நேற்று முன்தினம் பெங்களூரு, மைசூரு, மாண்டியா உட்பட எட்டு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சில ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச் சென்றனர்.இரண்டாவது நாளாக நேற்று, முடா முன்னாள் கமிஷனர்களான நடேஷ், தினேஷ்குமாரின் பெங்களூரு வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.இது தவிர முதல்வர் சித்தராமையாவின் தீவிர ஆதரவாளர்களான மைசூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஜெயராம், தொழிலதிபர் ராகேஷ் பாப்பண்ணா ஆகியோர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடந்தது.கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயராம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தியுள்ளார். ஆனால் இப்போது கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ளார். அவருக்கு எங்கிருந்து பணம் வந்தது, யாருடைய பினாமியாக உள்ளார் என்று விசாரணை நடக்கிறது. தலைமறைவு
ஜெயராம் வீட்டில் இருந்து, முடாவில் நிலம் பெற்றதற்கான ஒரு ஆவணத்தை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். அந்த ஆவணம், முடா முன்னாள் கமிஷனர் தினேஷ் குமாருக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது. தற்போது அவர் தலைமறைவாக உள்ளார்.முடா முறைகேடு தொடர்பாக அரசியல்வாதிகள், அதிகாரிகள் என, 20 பேர் பெயர் பட்டியலை, அமலாக்கத்துறை தயாரித்துள்ளது. வரும் நாட்களில் பட்டியலில் இருப்போர் வீடுகளில் சோதனை நடத்த வாய்ப்புள்ளது.