புதுடில்லி :தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் புதிய சட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது.தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்களை நியமிக்க, பார்லிமென்டில், மத்திய பா.ஜ., அரசு புதிய மசோதாவை தாக்கல் செய்தது. இதன்படி, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் தலைமையிலான குழு அளிக்கும் பரிந்துரையின்படி, ஜனாதிபதியால் தேர்தல் கமிஷனர் நியமிக்கப்படுவர். முன்னதாக, இந்தக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இடம் பெற்றிருந்த நிலையில், புதிய மசோதாவில் அவர் சேர்க்கப்படவில்லை. இந்த மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, சட்டமாகி விட்டது.இந்த புதிய சட்டத்துக்கு தடை கோரி, காங்., நிர்வாகி ஜெயா தாக்குர் உள்ளிட்டோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், 'இச்சட்டத்துக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர். இதை கேட்ட நீதிபதிகள், 'எதிர் தரப்பின் வாதங்களை கேட்காமல் சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது' எனக் கூறி, இது தொடர்பாக பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.