| ADDED : டிச 21, 2024 12:15 AM
சம்பல்:உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., ஜியா உர் ரஹ்மானின் வீட்டில் மின் திருட்டு நடந்ததற்காக, மாநில மின்சார வாரியம் 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்ததுடன், அவரது வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்தது.உத்தர பிரதேச மாநிலம், சம்பல் தொகுதியைச் சேர்ந்த சமாஜ்வாதி எம்.பி., ஜியா உர் ரஹ்மான். இவரது வீடு, சம்பல் நகரின் தீப சராய் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மின் வாரிய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அதில், மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறி போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரை ஏற்று போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கூறி, எம்.பி.,யின் தந்தை மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்நிலையில் மின் திருட்டிற்காக எம்.பி., ஜியா உர் ரஹ்மானுக்கு, மாநில மின் வாரியம் நேற்று 1.91 கோடி ரூபாய் அபராதம் விதித்தது; அத்துடன் அவர் வீட்டின் மின் இணைப்பையும் துண்டித்தது.இது குறித்து, மின் வாரிய உதவி பொறியாளர் வினோத் குமார் கூறியதாவது: ஜியா உர் ரஹ்மான் இல்லத்தில் மின் வாரியம் சார்பில் 4 கிலோவாட் திறன் உடைய மீட்டர் பொருத்தப்பட்டிருந்தது. அந்த மீட்டர் கடந்த ஆறு மாதங்களாக பூஜ்ஜியம் யூனிட் அளவீடையே காட்டியது.அந்த இடத்தில் ஸ்மார்ட் மீட்டரை பொருத்தி சோதனை செய்தபோது, 16 கிலோவாட் திறன் பயன்படுத்துவது தெரிந்தது. அதனடிப்படையில் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டை ஜியா உர் ரஹ்மானின் வழக்கறிஞர் மறுத்துள்ளார். '10 கிலோவாட் சோலார் பேனல் வாயிலாக மின்சாரம் பயன்படுத்தப்பட்டது; மின் வாரிய மின்சாரம் பயன்படுத்தப்படவில்லை' என கூறினார்.