ஐ.எப்.எஸ்., ரமேஷ்குமாருக்கு சுற்றுச்சூழல் வாரியர் விருது
புலிகள் திட்ட கர்நாடக வனப் பாதுகாப்பு அதிகாரி ரமேஷ் குமாருக்கு, வன விலங்கு பாதுகாப்புக்காக, சுற்றுச்சூழல் வாரியர் விருது வழங்கப்பட்டது.மைசூரில், புலிகள் திட்ட கர்நாடக வனப்பாதுகாப்பு அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் குமார். இவர், 2008ம் ஆண்டு, ஐ.எப்.எஸ்., அதிகாரி. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றினார்.பண்டிப்பூர் புலிகள் காப்பக இயக்குனராக சிறப்பாக பணியாற்றியதால், மத்திய, மாநில வனத்துறை அமைச்சர்கள் அவரை வெகுவாக பாராட்டினர். இதற்கிடையில், நாட்டின் 50வது புலிகள் திட்ட தினத்தை, பண்டிப்பூருக்கு வந்து, பிரதமர் நரேந்திர மோடி சபாரி சென்றார்.அப்போது, வன விலங்குகள் குறித்தும், வனம் குறித்தும் பிரதமருக்கு ரமேஷ் குமார் விளக்கினார். இவரது பணியை பாராட்டி, புலிகள் திட்ட கர்நாடக வனப்பாதுகாப்பு அதிகாரியாக, சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், மாஸ்டர் மைன்ட்ஸ் மற்றும் ஐ.எப்.எஸ்., அதிகாரிகள் அசோசியேஷன் இணைந்து, சிறந்த அதிகாரிகளுக்கு டில்லியில் சமீபத்தில் பாராட்டு விழா நடத்தியது.அப்போது, ஐந்து பிரிவுகளின் கீழ், ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். இதில், வன விலங்கு பாதுகாப்புக்காக, 2024ம் ஆண்டிற்கான தேசிய அளவிலான சுற்றுச்சூழல் வாரியர் விருதை, ஐ.எப்.எஸ்., அதிகாரி ரமேஷ்குமாருக்கு, தேசிய வனத்துறை இயக்குனர் ஜிதேந்திர குமார் வழங்கினார் - நமது நிருபர் -.