பெங்களூரு: பத்மஸ்ரீ விருது பெற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர், சாலுமரத திம்மக்கா உடல்நலக்குறைவால் தன், 114 வயதில் மரணம் அடைந்தார். கர்நாடகாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் சாலுமரத திம்மக்கா. 'மரங்களின் தாய்' என்று கர்நாடக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர். வயோதிகம், உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாலுமரத திம்மக்கா நேற்று மரணம் அடைந்தார். மருத்துவமனையில் இருந்த திம்மக்கா உடலுக்கு, முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார். பின், அவர் கூறுகையில், ''திம்மக்காவின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு வலியை தாங்கும் சக்தியை கொடுக்கவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவரது இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடக்கும்,'' என்றார். துமகூரின் குப்பியில், 1911ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திம்மக்கா பிறந்தார். இவரது தந்தை சிக்கரங்கய்யா. தாய் விஜயம்மா. சரியான கல்வி கிடைக்காமல் கல் குவாரியில் தினக்கூலியாக வேலை செய்த திம்மக்கா, மாகடியின் ஹுலிகல் கிராமத்தின் சிக்கய்யா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. பத்மஸ்ரீ விருது இந்தக் குறையை போக்க, மாகடியின் கூடூரில் இருந்து ஹுலிகல் வரை 4 கி. மீ., துாரத்திற்கு திம்மக்காவும், அவரது கணவரும் சேர்ந்து, 385 ஆலமர கன்றுகளை நட்டு பராமரித்தனர். இதன் விளைவாக மரங்கள் நன்கு வளர்ந்தன. அதன் பின், மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை முழு நேர வேலையாக திம்மக்கா செய்தார். கணவர் இறந்த பின், வளர்ப்பு மகன் உமேஷ் உதவியுடன் மரக்கன்றுகளை நட்டார். சுற்றுச்சூழல் ஆர்வலரான திம்மக்கா, தன் சொந்த முயற்சியில், மாநிலம் முழுதும், 8,000 மரங்களை நட்டு சர்வதேச கவனத்தை ஈர்த்தார். இவரது சேவையை கவுரவிக்கும் வகையில், 2019ல் அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆசிர்வாதம் கர்நாடக மத்திய பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம், ராஜ்யோத்சவா, தேசிய குடிமக்கள், மகிளா ரத்னா உட்பட பல விருதுகளை இவர் பெற்றுள்ளார். அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஓக்லாந்தின் சுற்றுச் சூழல் அமைப்பு, சுற்றுச் சூழல் கல்வி வளங்களுக்காக, திம்மக்காவின் பெயரை சூட்டி கவுரவித்தது.