நடுக்கடலில் படப்பிடிப்பு படகுகளுக்கு அபராதம்
கொச்சி, அனுமதி பெறாமல், நடுக்கடலில் சினிமா 'ஷூட்டிங்' நடத்திய இரண்டு படகுகள் கேரளாவில் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றுக்கு தலா, 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.கேரளாவில் மீன்பிடி படகுகளை மீன் பிடிப்பதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்; மற்ற பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு முன் அனுமதி பெற வேண்டும். அந்த படகுகளின் தாங்கும் திறன், பாதுகாப்பு வசதிகள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்படும்.இந்நிலையில், கொச்சிக்கு அருகே அரபிக்கடலில் செல்லானம் என்ற பகுதியில், இரண்டு மீன்பிடி படகுகளில் சினிமா ஷூட்டிங் நடத்தப்படுவது, மீன்வளத் துறைக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கடலோர போலீசார் உதவியுடன் அந்தப் படகுகளில் ஆய்வு செய்யப்பட்டது.எவ்வித முன் அனுமதியும் இல்லாமல், பாதுகாப்பு வசதிகள் இல்லாமல், 33 பேர் அந்த படகுகளில் படப்பிடிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த படகுகள் கரைக்கு கொண்டு வரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.விதிகளை மீறியதற்காக, அந்த படகுகளுக்கு தலா, 2.5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக மீன்வளத் துறை தெரிவித்துள்ளது.