உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்

பஞ்சாபில் ஓடும் ரயிலில் தீ; அலறியடித்து ஓடிய பயணிகள்

சிர்ஹிந்த்; பஞ்சாபில் கரிப் ரத் விரைவு ரயிலின் ஒரு பெட்டியில் திடீரென தீப்பற்றியதால் பதற்றம் உருவானது.இதுபற்றிய விவரம் வருமாறு; சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே அமிர்தசரஸ்-சஹர்சா எக்ஸ்பிரஸ் ரயில் ஆயிரக்கணக்கான பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. அப்போது குளிர்சாதன வசதி கொண்ட பெட்டி ஒன்றில் இருந்து புகை வந்துள்ளது.இதைக்கண்ட பயணி ஒருவர் உடனடியாக அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தார். அடுத்த சில விநாடிகளில் ரயில் நிற்க, பெட்டியில் இருந்த அனைத்து பயணிகளும் பீதியில் இறங்கினர். குழந்தைகள் மற்றும் உடமைகளுடன் கீழே குதித்த சிலர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினரும், தீயணைப்புப் படையினரும் உடனடியாக சம்பவ பகுதிக்கு விரைந்தனர். ஒரு மணி நேரத்திற்குள் தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்களும், மீட்புக்குழுவினரும் எரிந்த பெட்டியை அகற்றும் நடவடிக்கையில் இறங்கினர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், ரயிலின் 19வது பெட்டி முற்றிலும் எரிந்து நாசமாகிவிட்டது. இந்த சம்பவத்தில், 18வது பெட்டியும் லேசான சேதம் அடைந்தது. உடனடியாக தீ கட்டுப்படுத்தப்பட்டது என்றார்.சம்பவம் பற்றி வடக்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், சிர்ஹிந்த் ரயில் நிலையம் அருகே இன்று (அக்.18) காலை 7.50 மணி அளவில் ரயில் எண்;12204 அமிர்தசரஸ்-சஹர்சா கரிப் ரத் பெட்டியில் தீப்பிடித்தது. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக விரைந்து சென்று, பயணிகளை வேறு பெட்டியில் ஏற்றி, தீயை கட்டுப்படுத்தினர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் இந்த ரயில் அம்பாலாவுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அங்கு மாற்று பெட்டிகள் இணைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன.இவ்வாறு வடக்கு ரயில்வே வெளியிட்டுளள அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 18, 2025 10:57

புல்லட் ரயில் விடுவதில் இருக்கும் கவனம், மற்ற ரயில்களின் பராமரிப்பிலும் இருக்கவேண்டும்.


புதிய வீடியோ