கார் - லாரி மோதல் ஐந்து பேர் பலி
பாலக்காடு:கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோங்காடு பகுதியைச் சேர்ந்தவர்கள் விஜேஷ், 35, விஷ்ணு, 28, ரமேஷ், 31, ஆப்சல், 17, மகேஷ், 17. நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு கோங்காடு பகுதியில் இருந்து, பாலக்காடு- - கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலை வழியாக, மண்ணார்க்காடு நோக்கி காரில் சென்றனர்.அப்போது, கனமழை பெய்ததால், கார் கட்டுப்பாடு இழந்து, எதிர்திசையில் கோவை நோக்கி சென்ற லாரி மீது மோதியது. அப்பகுதி மக்கள், போலீசார், தீயணைப்பு படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.விபத்தில், காரின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்தது. காரின் கதவுகளை உடைத்து உள்ளிருந்தவர்களை மீட்டனர். விஷ்ணுவைத் தவிர மற்ற நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பாலக்காடு அரசு மருத்துவமனை அவசரப் பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட விஷ்ணு, சிகிச்சை பலனின்றி இறந்தார்.