உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல் முறையாக குடும்ப செலவில் உணவுக்கான தொகை சரிவு

சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல் முறையாக குடும்ப செலவில் உணவுக்கான தொகை சரிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததற்கு பிறகு முதல்முறையாக, உணவுக்கு இந்திய குடும்பங்கள் செலவிடும் தொகை, குடும்பத்தின் மொத்த சராசரி செலவில் பாதிக்கு கீழ் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு நடத்திய ஆய்வு அடிப்படையில் வெளியான தகவல்கள் வருமாறு: 'அரசின் கொள்கைகள் பிரதிபலிப்பு மற்றும் இந்திய உணவு நுகர்வில் மாற்றங்கள்' என்ற தலைப்பில், 2022 - 23 மற்றும் 2011 - 12 ஆண்டுகள் இடையே, இந்திய குடும்பங்களின் நுகர்வு செலவுக்கான ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடின்றி, குடும்பங்களின் சராசரி செலவழிப்பில், உணவுக்கான செலவு, பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது.சுதந்திரம் பெற்றதில் இருந்து இப்போது வரை, முதல்முறையாக மாத செலவில் உணவுக்காக செலவிடும் தொகையின் சராசரி குறைந்திருப்பது, குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்படுகிறது. மாதாந்திர குடும்பச் செலவு அதிகரித்து வந்துள்ள போதிலும், உணவுக்கான செலவில் சரிவு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்க கிராமப் பகுதிகளில், நுகர்வுக்கான செலவின் வளர்ச்சி 151 சதவீதமாகவும்; தமிழகத்தில் அது 214 சதவீதமாகவும்; அதிகபட்சமாக சிக்கிமில் 394 சதவீதமாகவும் உள்ளன. செலவிற்கான வளர்ச்சி, நகரங்களை விட கிராமப்பகுதிகளில் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்தது. நகரங்கள், கிராமங்கள் வேறுபாடின்றி, தானியங்களுக்கான செலவு குறிப்பிடத்தக்க அளவில் குறைந்திருக்கிறது. தயார்நிலை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், வெளியே வாங்கும் உணவுகள் கணிசமான இடம் பிடித்திருப்பதும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அரசின் உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ், பொது வினியோக திட்டத்தில் உணவு தானியங்கள் வழங்கப்படுவதும், குடும்பங்கள் அதற்காக செலவிடும் தொகையை கணிசமாக குறைத்துள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Mr Krish Tamilnadu
செப் 06, 2024 21:25

எங்க சாமி சமைக்கிறோம்?. நைட் டிப்பன் டேர்டெலிவரியில் மறந்து போனதையும் வரும் வழியிலேயே எக்ஸ்டா பார்சல் வாங்கிட்டு வந்து விடுகிறோமில? மினரல் வாட்டர், கரண்ட் பில், கேஸ் எல்லாமே காஸ்ட்லி. அடுப்படியா அளவா பயன்படுத்தணுமில


Lion Drsekar
செப் 06, 2024 11:10

ஒன்று இலவசம் , அரசு வேலை, தனியார் கம்பெனியில் வேலை , மக்கள் வரிப்பணத்தில் இலவச கார் வைத்திருப்பவர்களும் ரேஷன் கடைகளிலில் இலவசத்தைப் பெறுகிறார்கள் , மற்றொரு பக்கம் பருப்பு விலை கூடிவிட்டதால் நடுத்தர மக்கள் வாங்குவதைத் தவிர்க்கிறார்கள் , முக்கியமாக எல்லோருமே பிணியாளர்களாக மாற்றிவிட்டது தற்போதைய கலப்பட உணவு விநியோகம், எல்லாவற்றிலும் பூச்சி மருந்து, சர்க்கரை நோய், மருத்துவ ஆலோசனை குறைத்த அளவில் சாப்பிடுங்கள் , பல காரணங்கள் உள்ளன, விவசாயம் செய்யும் நம் எல்லோருக்கும் உணவளிக்கும் விவசாயிகளே கஞ்சியும் கூழும் மட்டுமே குடிக்கிறார்கள் , வந்தே மாதரம்


KRISHNAN R
செப் 06, 2024 09:21

மருத்துவ செலவுகள் அதிகம்


K.Kumaraswamy
செப் 06, 2024 07:38

இந்திய குடும்பங்களில் உணவு தவிர மருத்துவம் உட்பட எத்தனை செலவுகள் அதிகரித்துள்ளன என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதன் காரணமாகத்தான் உணவுச் செலவின் சதவீதம் குறைந்துள்ளது. இதனைப் பெருமையாக கருத இயலாது.


K.Kumaraswamy
செப் 06, 2024 07:34

மொத்த செலவில் உணவுக்கான சதவீதம் குறைந்து விட்டது என ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. குடும்பங்களில் உணவு தவிர செய்யப்படும் மருத்துவம் உட்பட இதர செலவுகள் அதிகரித்து விட்டதன் காரணமாக கூட உணவு செலவின் சதவீதம் குறைந்து இருக்கலாம்.


Balasubramanian
செப் 06, 2024 05:34

நுகர் பொருள் செலவுகள் அதிகரிக்க காரணம் வீட்டில் கஞ்சி இருக்கிறதோ இல்லையோ ஒரு செல்போன் டிவி தேவை என்கிற மக்கள் மனப்பான்மை இப்போது பணப் பரிமாற்றம் செய்ய செல்போன் தேவை எனினும் அதனால் சில சமூக ஊடகங்களின் மூலம் குற்றங்களும் கூடி நிற்கின்றன. மேலும் மது சாராயம் தட்டுப்பாடின்றி கிடைக்கிறது. நுகர் பொருள் பண வரவை விட பாதி ஆகி நிற்கும் உணவுத் தேவையை விட தமிழகத்தில் 214 சதவிகிதம் அதிகம் இருப்பதற்கு வேறு காரணங்களைத் தேடவும் வேண்டுமா?


புதிய வீடியோ