ஜம்மு காஷ்மீரில் அச்சுறுத்தலாக மாறிய காட்டுத்தீ
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் அடுத்த 7 தினங்களில் பெரும் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து காஷ்மீர் பிராந்திய கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை; பள்ளத்தாக்கு பகுதிகளில் உள்ள 10 மாவட்டங்களில் காட்டுத்தீயால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற துணை கமிஷனர்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நிலை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு தேவை. அசம்பாவீதம் ஏற்படுவதற்கு முன்பாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சமூக வலைதளங்கள், உள்ளூர் மீடியாக்களின் உதவியுடன் இந்த காட்டுத்தீ குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதேவேளையில், பொதுவெளிகளில் நெருப்புகளை பற்ற வைக்க வேண்டாம். ஏதாவது தீவிபத்து ஏற்பட்டால் உடனடியாக தகவல் கொடுக்க வேண்டும். வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் தயார் நிலையில் இருக்க வேண்டும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.