| ADDED : டிச 30, 2025 02:17 AM
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் நேற்று கைது செய்யப்பட்டார். கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில், கருவறைக்கு முன்பாக உள்ள துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக 2019ல் கழற்றப்பட்டன. கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த உன்னிகிருஷ்ணன் போத்தி என்ற தொழிலதிபர், தங்கக் கவசங்களை சென்னைக்கு எடுத்து வந்து தங்க முலாம் பூசியபின் மீண்டும் கோவிலில் ஒப்படைத்தார். அப்போது தங்கக் கவசங்களின் எடை, 4.54 கிலோ அளவுக்கு குறைந்திருந்தது. இந்த விவகாரத்தில் உண்மையை கண்டறிய, கேரள உயர் நீதிமன்றம் சிறப்பு விசாரணை குழுவை அமைத்தது. இக்குழுவினர், துவார பாலகர் சிலைகள் மற்றும் கருவறை கதவு தங்கக் கவசங்கள் திருடப்பட்டன என இரு வழக்குகளை பதிவு செய்தனர். முக்கிய குற்றவாளியாக உன்னிகிருஷ்ணன் போத்தி கைது செய்யப்பட்டார். மேலும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் தலைவர் பத்மகுமாரும் கைதானார். இந்நிலையில், பத்மகுமார் பதவிக் காலத்தில் தேவசம் போர்டு உறுப்பினராக இருந்த விஜயகுமார் என்பவரும் நேற்று கைது செய்யப்பட்டார். இதன் மூலம், இவ்வழக்கில் கைதானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது. ராஜபாளையத்தில் விசாரணை சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டானைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரிடம், கேரள சிறப்பு விசாரணைக் குழுவினர் நேற்று விசாரித்தனர். சேத்துார் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து அவரிடம் விசாரணை நடந்தது. மேலும், திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.ஐ.டி., அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகவும் அறிவுறுத்தப்பட்டது. கேரளாவின் இடுக்கி மாவட்டம், வண்டிப்பெரியாறு பகுதியில் பிறந்த கிருஷ்ணன், 15 ஆண்டுகளுக்கு மேலாக பூர்வீக ஊரான ராஜபாளையம் அருகே ஜமீன் கொல்லங்கொண்டானில் வசிக்கிறார். இவர் மீது, இரிடியம் கடத்தல் வழக்கு நிலுவையில் உள்ளது.