உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலியல் விவகாரத்தில் மாஜி பிரதமர் பேரனுக்கு சாகும் வரை சிறை

பாலியல் விவகாரத்தில் மாஜி பிரதமர் பேரனுக்கு சாகும் வரை சிறை

முன்னாள் பிரதமரின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு... பாலியல் விவகாரத்தில் மக்கள் பிரதிநிதிகள் கோர்ட் உத்தரவு மேலும் மூன்று பாலியல் வழக்குகள் இவர் மீது 'பெண்டிங்' தந்தை ரேவண்ணா, தாய் பவானி மீதும் வழக்குகள் உள்ளனபெங்களூரு, ஆக. 3- வேலைக்கார பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், முன்னாள் பிரதமர் பேரனான, முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து, பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு, 11 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படியும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. பிரஜ்வல் மீது, மேலும் மூன்று பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவருமான தேவ கவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 34. இவர், ஹாசன் லோக்சபா தொகுதி முன்னாள் எம்.பி.,யாவார். வீடியோ வெளியானது கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில், இரண்டாவது முறையாக ஹாசன் தொகுதியிலேயே போட்டியிட்டார். அந்த நேரத்தில், பல பெண்களுடன் பிரஜ்வல் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் சூடுபிடிக்கும் முன், ஓட்டுப்பதிவு நாளன்று, வெளிநாட்டுக்கு பிரஜ்வல் தப்பிச் சென்றார். பாலியல் விவகாரம் குறித்து விசாரிக்க, எஸ்.ஐ.டி., என்ற சிறப்பு புலனாய்வு குழுவை மாநில அரசு அமைத்தது. இதற்கிடையில், பிரஜ்வல் உல்லாச வீடியோ வில் இருந்த ஹொளேநரசிபுராவைச் சேர்ந்த பெண், பிரஜ்வல் தன்னை மிரட்டி பலாத்காரம் செய்தார் என, போலீசில் புகார் அளித்தார். அதன்படி, பிரஜ்வல் மீது முதல் வழக்கு பதிவானது. புகார் அளித்த பெண், பிரஜ்வலின் தந்தை ரேவண்ணா வீட்டில் முன்னர் வேலை செய்தவர். இதைத்தொடர்ந்து மேலும் மூன்று பெண்கள் அளித்த புகாரில், பிரஜ்வல் மீது நான்கு வழக்குகள் பதிவாகின. வெளிநாட்டில் பதுங்கிய பிரஜ்வலை பிடிக்க, ' ரெட் கார்னர் நோட்டீஸ்' பிறப்பிக்கப்பட்டது. ஆனால், தேவ கவுடா உத்தரவில், ஜெர்மனியில் இருந்து பிரஜ்வல் பெங்களூரு திரும்பினார். அவரை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில், கடந்த ஆண்டு மே 31ம் தேதி, சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். குற்றப்பத்திரிகை இதையடுத்து, பிரஜ்வல் மீதான புகார்கள் குறித்து தீவிர விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழுவினர், பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில், 1,632 பக்க குற்றப்பத்திரிகையை கடந்த ஏப்ரல் 3ம் தேதி தாக்கல் செய்தனர். மொத்தம், 113 சாட்சிகள் சேர்க்கப்பட்டிருந்தனர். இதற்கிடையில் பிரஜ்வலின் ஜாமின் மனுக்கள், மக்கள் பிரதிநிதிகள், கர்நாடக உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்திலும் தள்ளுபடியாகின. மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் போது, 2,000க்கும் மேற்பட்ட படங்கள், 40க்கும் மேற்பட்ட வீடியோக்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. 'பிரஜ்வலுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்' என, அரசு தரப்பு வக்கீல்கள் அசோக் நாயக், ஜெகதீஷ் ஆகியோர் நீதிபதியிடம் கேட்டுக் கொண்டனர். வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பிரஜ்வல் குற்றவாளி என நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் நேற்று முன்தினம் அறிவித்தார். நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். முன்னாள் பிரதமரின் பேரன் என்பதால், பிரஜ்வலுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுதும் நிலவியது. தற்கொலை முயற்சி இந்த வழக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று காலை விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஜெகதீஷ், அசோக் நாயக் ஆகியோர் தண்டனைக்கான இறுதி வாதங்களை முன்வைத்தனர். அவர்கள் கூறியதாவது: வீட்டு வேலை செய்த படிப்பறிவற்ற பெண்ணை மிரட்டி, பிரஜ்வல் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். அதை வீடியோவும் எடுத்துள்ளார். அந்த வீடியோ வெளியானதால், பாதிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முயன்றார். மனரீதியாக சித்ரவதை அனுபவித்தார். மிக இளம் வயதில் எம்.பி.,யாக தேர்வான ஒருவரின் இந்தச் செயல் அருவருக்கத்தக்கது. இவரால் பாதிக்கப்பட்ட பெண், சமூகத்தில் தலைகாட்ட முடியாத நிலையில் உள்ளார். அவர் வசித்த ஊரில் இருந்து வேறு ஊருக்கு இடம்பெயர்ந்து விட்டார். பலாத்காரம் செய்த பெண்களை, பிரஜ்வல் வீடியோ எடுத்து மிரட்டி உள்ளார். அவர் மீது மேலும் மூன்று பாலியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவருக்கு கடுமையான தண்டனை வழங்கி, இந்த சமூகத்திற்கு வலுவான செய்தியை அனுப்ப வேண்டும். இவருக்கு விதிக்கப்படும் அபராதத்தில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வாதிட்டனர்.

* குறைந்த தண்டனை

பிரஜ்வல் தரப்பு வக்கீல்கள் நளினா மேகவுடா, அருண், விபுல் ஜெயின் ஆகியோர் முன்வைத்த வாதம்: எங்கள் மனுதாரர் பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை. மக்களுக்கு சேவை செய்யவே வந்தார். தேர்தல் நேரத்தில் அவரது ஆபாச வீடியோக்கள் வெளியாகின. தண்டனை விதிக்கும் போது அவரது அரசியல் பின்னணியை கருத்தில் கொள்ளக்கூடாது. எம்.பி.,யாக இருந்த போது அவர் செய்த பணிகளை புறக்கணிக்கக் கூடாது. அவருக்கு 34 வயது தான் ஆகிறது. பாதிக்கப்பட்ட பெண், இந்த சமூகத்தால் புறக்கணிக்கப்படவில்லை. அவருக்கு திருமணமாகி கணவர், பிள்ளைகள் உள்ளனர். அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். ஆனால், பிரஜ்வல் அனைத்தையும் இழந்து விட்டார். இதை கருத்தில் கொண்டு, அவருக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* சிறந்த மாணவன்

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 'நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?' என்று பிரஜ்வலிடம் கேட்டார். அப்போது கண்ணீருடன் ஆங்கிலத்தில் பேசிய பிரஜ்வல், “நான் ஒரு காலத்தில் எம்.பி.,யாக பணியாற்றினேன். எம்.பி.,யாக இருந்த போது என் மீது எந்த பாலியல் குற்றச்சாட்டும் வரவில்லை. தேர்தல் நேரத்தில் என் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்தது. எம்.பி.,யாக இருந்த போது மக்களுக்காக சிறப்பான சேவை செய்தேன். நான் இன்ஜினியரிங் பட்டதாரி. சிறப்பான மாணவனும் கூட. என் பெற்றோருக்கு வயதாகி விட்டது. அவர்களை கவனிக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அவர்களை பார்த்து ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. அரசியலில் சீக்கிரமாக வளர்ந்ததால், இப்போது சிக்கிக் கொண்டேன்,” என்றார்.

* ரூ.11.60 லட்சம்

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் அளித்த தீர்ப்பில், 'குற்றவாளியான பிரஜ்வலுக்கு, ஆறு பிரிவுகளின் கீழ் சாகும் வரை சிறை மற்றும் 11.60 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில், 11.25 லட்சத்தை பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு வழங்க வேண்டும்' என்று தெரிவித்தார். தீர்ப்பை கேட்டதும் நீதிமன்றத்திலேயே, பிரஜ்வல் கண்ணீர் விட்டார். தீர்ப்புக்கு பின் பிரஜ்வலை பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்று, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் போலீசார் அடைத்தனர். பிரஜ்வலுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதால், அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, பிரஜ்வல் வக்கீல்கள் தயாராகி வருகின்றனர்.

* ரேவண்ணா, பவானி நிலை?

பிரஜ்வலுக்கு தண்டணை கொடுக்கப்பட்ட வழக்கில் தான், அவரது தந்தை ரேவண்ணா, தாய் பவானியும் சிக்கி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணை கடத்திச் சென்று மிரட்டியதாக, இருவர் மீதும் வழக்கு பதிவானது. ரேவண்ணா கைதாகி ஜாமினில் வந்தார். பவானி முன்ஜாமின் வாங்கி தப்பினார். இந்த வழக்கில் ரேவண்ணா, பவானி மீது விசாரணை நடத்த உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், தீர்ப்பை வாசிக்கும் போது, அவர்களை பற்றி நீதிபதி எதுவும் குறிப்பிடவில்லை. ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

காஷ்மீர் கவுல் பிராமணன்.ஷோபியன்
ஆக 03, 2025 20:31

இந்த நாட்டிலேயே ஒரு அருவருக்கத்தக்க கீழ்தரமான கேவலமானவர்கள் என்றால் இந்த தேவகவுடாவும் அவரது குடும்பமுமாக தான் இருக்கும்.இந்த தேவகவுடா தான் மோடி ஜி பிரதமரானால் வேறுநாட்டுக்கு செல்வேன் என்று கூறிய கேவலமான அரசியல்வாதி.பிறகு மோடிஜி அவர்களின் காலில் விழுந்தது வேறு கதை.


theruvasagan
ஆக 03, 2025 17:35

கர்நாடகாவில் அரசியல் பின்புலம் உள்ள ஒரு நபரை குற்றவாளி என்று தீர்ப்பு சொல்லி தண்டனை தருவது நடந்துள்ளதே. அப்படி.தமிழ் நாட்டில் நடக்க வாய்ப்புள்ளதா.


l.ramachandran
ஆக 03, 2025 21:03

வாய்ப்பே இல்ல ராஜா, வாய்ப்பே இல்ல. பகல் கனவு காண வேண்டாம்.


சிந்தனை
ஆக 03, 2025 16:01

ஒரு மாதத்திற்கு மேல் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு நீதிபதிகளின் சம்பளத்திலிருந்து பராமரிப்பு செலவு செய்வது நல்லதாக இருக்கும் என்று தோன்றுகிறது


சிந்தனை
ஆக 03, 2025 15:58

முதலில் நாட்டில் உள்ள சட்டபதிகள் வழக்குரைஞர்கள் முதல் கடைசி அரசு அலுவலர்கள் வரை உள்ள அனைவருக்கும் டி என் ஏ சோதனை செய்து முறையற்ற உறவு உள்ளவர்களை தூக்கில் ஏற்றி விட்டால் நாடு இனி திருந்த துவங்கும்


VSMani
ஆக 03, 2025 12:07

ஒரு முன்னாள் பிரதமர் பேரனாக இருந்தும் தப்பை சரியாக செய்யத்தெரியவில்லையே? இவர் ஒரு அரசியல்வாதிக்குரிய அடிப்படை தகுதியற்றவர். இவர் தாத்தா முன்னாள் பிரதமராயிருந்தும் பேரனுக்கு அரசியல் பாடம் கற்றுக்கொடுக்கவில்லை.


RRR
ஆக 03, 2025 11:58

இந்தியாவில் சட்டதிட்டங்கள் எல்லாம் சாமானியர்களுக்குத்தான்... நீதி என்பது குற்றவாளிகளின் பொருளாதாரத்துக்கேற்றாற்போல் கிடைக்கும். பணம் இருக்கும் இடத்தில் சட்டம் பதுங்கிக்கொள்ளும். நீதி என்பது விற்பனைப்பொருளாகி பலகாலமாகிவிட்டது.


Kasimani Baskaran
ஆக 03, 2025 11:25

எதை எடுத்தாலும் வன்மன் நீக்கி மேன்மை புகுத்த...


Premanathan S
ஆக 03, 2025 10:36

நம் நாட்டில் அமைச்சர், எம் பி , MLA, இவர்கள் என்ன தவறு செய்தாலும் வெறும் விசாரணையோடு முடிந்து விடும் தண்டனை கிடையாது என்று இவ்வளவு காலமாக நினைத்துக் கொண்டிருந்தேனே இது என்ன புதிதாக இருக்கு


பிரேம்ஜி
ஆக 03, 2025 09:02

எதிர் கட்சி வக்கீல்கள் வாதம் மிகவும் கொடூரமாக உள்ளது. வக்கீல்கள் மனச்சாட்சியே இல்லாதவர்களா? பிரஜ்வல் எம் பி இவர்கள் வீட்டு பெண்களிடம் இப்படி நடந்திருந்தால் இதே வாதங்களை முன்வைத்து தண்டனையிலிருந்து தப்பிக்கச் செய்வார்களா? நீதி நேர்மையெல்லாம் இந்த நாட்டில் எதிர்பார்க்கக் கூடாது!


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 03, 2025 08:58

இவரின் மேல்முறையீட்டு வழக்கில் தண்டனை காலம் குறையலாமே அன்றி தண்டனை ரத்தாக வாய்ப்பில்லை..... இவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையை குறைக்கும் படி நீதிபதியிடம் வேண்டிக்கொண்டவர்.....!!!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை