சட்டவிரோத சுரங்க தொழில் மாஜி மத்திய அமைச்சருக்கு ரூ.25.30 கோடி அபராதம்
கலபுரகி: சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் பகவந்த் கூபா, 25.30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி, காலகி தாசில்தார் 'நோட்டீஸ்' அனுப்பிஉள்ளார். கர்நாடக மாநிலம், பீதர் தொகுதி பா.ஜ.,வின் முன்னாள் எம்.பி., பகவந்த் கூபா. பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தார். கலபுரகி மாவட்டம், சித்தாபுரா தாலுகாவின், வச்சா கிராமத்தில் 2 ஏக்கரில் சுரங்க தொழில் நடத்த, மாநில அரசிடம் அனுமதி பெற்று உள்ளார். ஆனால், 8 ஏக்கருக்கும் அதிகமான பகுதியில், சட்டவிரோதமாக சுரங்க தொழில் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, சஞ்சீவ் குமார் திப்பண்ணா ஜவகர் என்பவர், சுரங்கம், நில ஆய்வியல் துறையில் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், காலகி வருவாய் அலுவலர்களுடன் இணைந்து சுரங்கத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, 2014 ஜூலை 19 முதல், 2019 ஜூலை 18 வரை, சட்டவிரோத சுரங்க தொழில் நடந்திருப்பது கண்டறியப்பட்டது. இதை பற்றி காலகி தாசில்தாரிடம் அதிகாரிகள் அறிக்கை அளித்தனர். அறிக்கை அடிப்படையில், சட்டவிரோத சுரங்க தொழில் நடத்தியதால், 25.30 கோடி ரூபாய் அபராதம் செலுத்தும்படி உத்தரவிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் பகவந்த் கூபாவுக்கு, காலகி தாசில்தார் நேற்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீசை எதிர்த்து, சட்டப்போராட்டம் நடத்த பகவந்த் கூபா முடிவு செய்துள்ளார்.