| ADDED : நவ 19, 2025 03:55 AM
ஆமதாபாத்: குஜராத்தில் பிறந்து ஒரு நாளே ஆன பச்சிளம் குழந்தையை அவசர சிகிச்சைக்கு அழைத்துச் சென்றபோது, ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில் குழந்தை, டாக்டர் உட்பட நான்கு பேர் கருகி பலியாகினர். குஜராத்தின் மகிசாகர் பகுதியை சேர்ந்தவர் ஜிக்னேஷ் மோசி, 38. இவரது மனைவிக்கு கடந்த, 17ல் மொடசா பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால், மொடசாவில் இருந்து ஆமதாபாதில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் குழந்தையை கொண்டு சென்றனர். முன்சீட்டில் டிரைவர், மோசியின் உறவினர்கள் இருவர் அமர்ந்திருந்தனர். பின் சீட்டில் பச்சிளம் குழந்தை, அதன் தந்தை மோசி, ஆமதாபாதை சேர்ந்த டாக்டர் சாந்திலால் ரென்டியா, 30, அரவல்லியை சேர்ந்த நர்ஸ் புரிபென் மனத், 23, ஆகியோர் அமர்ந்திருந்தனர். ஆம்புலன்ஸ் மொடசா - தன்சுரா சாலை அருகே நேற்று அதிகாலை சென்றபோது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில், பின்சீட்டில் இருந்த பச்சிளம் குழந்தை, தந்தை மோசி, டாக்டர் சாந்திலால், நர்ஸ் புரிபென் மனத் ஆகிய நான்கு பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். டிரைவர் மற்றும் மோசியின் உறவினர்கள் இருவர் ஆகிய மூவர் தீக்காயத்துடன் உயிர் தப்பினர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.